அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் அதிகாரப்பூர்வமற்ற இரண்டு பயிற்சி போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது பயிற்சி போட்டியானது ஏற்கனவே டிராவில் முடிவடைந்தது.
கேட்டு வாங்கிய வாய்ப்பில் அசத்திய கே.எல் ராகுல் :
அதனை தொடர்ந்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது பயிற்சி போட்டியானது நார்த்தாம்ப்டன் நகரில் உள்ள கவுன்ட்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடி வரும் இந்திய ஏ அணியானது : முதல்நாள் ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் கே.எல் ராகுல் 116 ரன்களையும், துருவ் ஜுரேல் 52 ரன்களையும் குவித்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய கே.எல் ராகுல் 168 பந்துகளை சந்தித்து 15 பவுண்டரி மற்றும் 1 சிக்சருடன் 116 ரன்கள் குவித்துள்ளது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதன்மை இந்திய அணியிலும் இடம் பெற்றிருந்தார். இதன் காரணமாக அவர் நிச்சயம் இங்கிலாந்து தொடரில் ஜெய்ஸ்வாலுடன் துவக்க வீரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இவ்வேளையில் தான் இங்கிலாந்து தொடருக்காக தயாராக வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே இங்கிலாந்து சென்று இந்திய ஏ அணியுடன் இணைந்து பயிற்சிபெற விரும்புவதாக பிசிசிஐ-யிடம் கே.எல் ராகுல் அனுமதி கேட்டிருந்தார். அவரது வேண்டுகோளை உடனடியாக ஏற்ற பி.சி.சி.ஐ : இங்கிலாந்து சென்று இந்திய ஏ அணியுடன் இணைந்து பயிற்சி செய்யுமாறு அனுமதி அளித்தது.
இதையும் படிங்க : 11 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்து நடராஜனை விளையாட வைக்காதது ஏன்? – ஹேமங் பதானி விளக்கம்
அந்த வகையில் தான் கேட்டு வாங்கிய இந்த வாய்ப்பில் பங்கேற்ற முதல் போட்டியிலேயே அவர் சதம் அடித்துள்ளது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்த பயிற்சி போட்டியில் அவர் சிறப்பாக விளையாடியுள்ளதன் மூலம் எதிர்வரும் இங்கிலாந்து தொடரிலும் அவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.



