வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடந்த ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து சாதனை படைத்தது. அந்த நிலைமையில் துவங்கிய இந்த டி20 தொடருக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பிய நிலையில் அதைவிட சிறப்பாக செயல்படும் இந்தியா இந்த சுற்றுப்பயணத்தின் 2 தொடர்களையும் வென்றுள்ளது.

முன்னதாக இந்த வருடம் இதுவரை முடிந்த 7 மாதங்களில் கேஎல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஷிகர் தவான் என 7 வெவ்வேறு வீரர்கள் இந்தியாவின் கேப்டன்களாக செயல்பட்டுள்ளார்கள். இந்திய வரலாற்றில் இதற்கு முன் கடந்த 1959இல் அதிகபட்சமாக 5 வெவ்வேறு வீரர்கள் மட்டுமே கேப்டனாக செயல்பட்ட நிலையில் முதல் முறையாக இப்போது 7 கேப்டன்கள் இந்தியாவை வழி நடத்துவது நிறைய சலசலப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
காரணமாக ரோஹித்:
ஏனெனில் நிலையான ஒரு கேப்டன் அமையவில்லையெனில் எப்படி அவரது தலைமையில் அனைத்து வீரர்களும் செட்டிலாகி உலக கோப்பை போன்ற பெரிய தொடரை வெல்ல முடியும் என்பதே ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கவலையாக இருக்கிறது. கடந்த 2017 – 2021 வரை தொடர்ச்சியாக 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டு கடந்த ஜனவரியில் அந்த பதவிகளை அடுத்தடுத்து ராஜினாமா செய்த விராட் கோலிக்கு பின் புதிய முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா நல்ல உடல் தகுதியுடன் இல்லாமல் அடிக்கடி காயமடைவதும் இடையிடையே ஓய்வெடுப்பதுமே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இதனால் விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து பிசிசிஐ நீக்க முடிவு தவறு என்றும் அவரைப் போல் ரோகித் சர்மாவால் தொடர்ந்து இந்திய அணியை வழிநடத்த முடியவில்லை என்றும் நிறைய ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால் 7 மாதங்களில் 7 கேப்டன்கள் செயல்பட்டது மிகவும் சிறப்பானது என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
வேலை சுலபம்:
இப்படி வெவ்வேறு வீரர்கள் இந்திய அணியை வழி நடத்துவதால் தன்னுடைய வேலை சுலபமாகிறது என்பதை விட வருங்காலத்தில் இந்திய அணியை வழிநடத்தும் சிறப்பான கேப்டனை கண்டறிய உதவுவதாகவும் தெரிவிக்கும் அவர் இதற்கு முக்கிய காரணமாக ஐபிஎல் தொடர் அமைவது வரவேற்கத்தக்க அம்சம் என்று கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் அளித்த பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அந்த தலைமை பண்புகளை வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் 10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் விளையாடுகிறோம். அதனால் அதில் பங்கேற்கும் 10 கேப்டன்கள் ஏதோ ஒரு தருணத்தில் இந்தியாவை வழிநடத்தும் அளவுக்கு உருவாகிறார்கள்”

“சொல்லப்போனால் இது வரவேற்கத்தக்க அம்சமாகும். ஏனெனில் இதனால் எனது வேலை சுலபமாக அமைவதுடன் கேப்டன்ஷிப் பற்றி இளம் வீரர்கள் புரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இது ஒருவருக்கு ஒரு எண்ணம் இருந்தால் அந்த எண்ணத்தை நான் எவ்வாறு கையாள்கிறேன் என்பதைப் பொருத்தது. என்னைப் பொறுத்தவரை ஒரு கேப்டனாக அதுதான் என்னுடைய வேலை, அதைத்தான் நான் செய்ய முயற்சிக்கிறேன்” என்று கூறினார்.
அவர் கூறுவது போல என்னதான் 7 மாதங்களில் 7 கேப்டன்கள் செயல்பட்டாலும் போட்டியின் முடிவுகளில் இந்தியாவின் வெற்றியில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பாக ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட், ஷிகர் தவான் ஆகியோரது தலைமையில் இந்தியா தோல்வியடையாமல் அசத்தலாகவே செயல்பட்டது. அந்த வகையில் இது அணியில் விளையாடும் அனைத்து வீரர்களுக்கும் சுதந்திரத்துடன் செயல்படுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுப்பதாக தெரிவிக்கும் ரோகித் சர்மா இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.
இதையும் படிங்க : IND vs WI : ஒன்னு இல்ல. ரெண்டு இல்ல. ஏகப்பட்ட மாற்றங்களுடன் களமிறங்கிய இந்திய அணி – இத்தனை மாற்றமா?
“உண்மையை சொல்ல வேண்டுமெனில் உங்களை சுற்றி நிறைய கேப்டன்களை உருவாக்குவது நல்ல அம்சமாகும். உங்களுக்கு அனைத்து அழுத்தங்களையும் புரிந்துகொண்டு சமாளிக்கக் கூடிய வீரர்கள் தேவை. அணி எங்கு முன்னேற முயற்சிக்கிறது என்பது பற்றிய செய்தி கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடமிருந்து தெளிவாக இருந்தால் தனிநபர்கள் நிச்சயமாக அதை செய்ய முயற்சிப்பார்கள். அது நடப்பதற்கு அனைத்து வீரர்களுக்கும் சுதந்திரமும் தெளிவும் தேவை. அதைத்தான் நாங்கள் செய்ய முயற்சிக்கிறோம். அவர்களுக்கு முடிந்தளவு சுதந்திரம் கொடுக்க முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.



