இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 – 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக இலங்கைக்கு எதிராக ஒரு ஒருநாள் தொடரை இந்தியா இழந்தது. குறிப்பாக அந்த 3 போட்டிகளிலுமே 231, 241, 249 ரன்களை அடிக்க முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது.
அதிலும் குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் எதிர்ப்புறம் விராட் கோலி உள்ளிட்ட மற்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் இலங்கையின் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொண்டு பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதனால் 27 வருடங்களாக கட்டிக் காத்த மானத்தை இந்தியா காற்றில் பறக்க விட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
ரோஹித் அதிருப்தி:
இந்நிலையில் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஸ்வீப் ஷாட்டுகளை அதிகமாக அடித்தால் தான் இது போன்ற பிட்ச்சில் அசத்த முடியும் என்று கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அதை இலங்கை பேட்ஸ்மேன்கள் சரியாக செய்ததாக அவர் பாராட்டியுள்ளார். ஆனால் அவர்களை பார்த்து கூட இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்வீப் ஷாட்டுகளை அதிகமாக அடிக்கவில்லை என்று கேப்டன் ரோஹித் சர்மா ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் தொடர்ச்சியாக ஸ்வீப்களை அடித்து வாய்ப்பை எடுத்தனர். இந்த மைதானத்தில் நேராக நிறைய ரன்கள் அடிக்கவில்லை. இலங்கை பேட்ஸ்மேன்கள் நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு காலை அதிகமாக பயன்படுத்தவில்லை. மாறாக ஸ்வீப் ஷாட்டை அடித்து ஸ்கொயர் லெக் மற்றும் மிட் விக்கெட் திசைகளை பயன்படுத்தி ரன்கள் குவித்தனர். ஆனால் ஒரு அணியாக நாங்கள் அதை செய்ய தவறி விட்டோம்”
“நாங்கள் போதுமான அளவுக்கு ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், பெடல் ஸ்வீப் அடிக்காமல் எங்களுடைய கால்களை அதிகமாக பயன்படுத்தினோம். அது தான் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக மூன்றாவது போட்டியில் குசால் மெண்டிஸ் மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் அதிகமாக ஸ்கொயர் ஆஃப் தி விக்கெட் திசையை பயன்படுத்தினர்”
இதையும் படிங்க: அவங்களுக்கு ஹெல்ப் பண்ண நினச்சு.. என்னோட திட்டமும் பழாகிடுச்சு.. கேப்டன் ரோஹித் வருத்தம்
“அவர்கள் சுழலுக்கு தகுந்தார் போல ஸ்வீப் ஷாட்டுகளை பயன்படுத்தி ஃபீல்டர்களை இடது – வலது புறமாக நகர்த்தினர். அந்த வகையில் அவர்கள் சாதுரியமாக பேட்டிங் செய்தனர். ஆனால் நாங்கள் அதை செய்யவில்லை. இருப்பினும் எங்களுடைய வீரர்கள் வலைப்பயிற்சியில் முடிந்தளவுக்கு அனைத்து பயிற்சிகளுமே கடினமாக செய்கின்றனர். எனவே பல்வேறு ஷாட்டுகளை அடிப்பதில் அவர்களிடம் தடுமாற்றம் இருப்பதாக நான் பார்க்கவில்லை” என்று கூறினார்.



