
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 4ஆம் தேதி லக்னோவில் பதினாறாவது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி லக்னோவுக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. மேலும் மும்பை அணியில் நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என்று ஹர்திக் பாண்டியா அறிவித்தார்.
வலைப்பயிற்சி செய்யும் போது முழங்காலில் லேசான காயத்தைச் சந்தித்ததால் ரோஹித் சர்மா விலகுவதாக கேப்டன் பாண்டியா அறிவித்தார். அந்த அறிவிப்பு ரசிகர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் தோனிக்கு முன்பாகவே 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் சமீப காலங்களாகவே தடுமாற்றமாக பேட்டிங் செய்து வந்தார்.
அதனால் அவரை கழற்றி விட்ட மும்பை நிர்வாகம் பாண்டியாவை புதிய கேப்டனாக நியமித்தது. அதற்கு மும்பை ரசிகர்களே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரோகித் தலைமையில் இந்தியா 2 ஐசிசி கோப்பைகளை வெல்ல பாண்டியா உதவினார். அதன் காரணமாக இம்முறை மும்பை ரசிகர்கள் பாண்டியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம் சாதாரண வீரராக விளையாடும் ரோஹித் சர்மாவை ஃபிட்டாக இல்லை என்று மும்பை அணி நிர்வாகம் கருதுகிறது. அதனால் முதல் 3 போட்டிகளில் அவரை இம்பேக்ட் வீரராக மட்டுமே மும்பை நிர்வாகம் பயன்படுத்தியது. அந்த வாய்ப்பில் முதல் 3 போட்டிகளில் ரோஹித் சர்மா 0, 8, 13 என மொத்தம் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
அதன் காரணமாக 3வது போட்டியில் அவரை மும்பை நிர்வாகம் கூல்ட்ரிங்க்ஸ் தூக்குமாறு சொன்னது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனால் 5 கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மும்பை அணியில் தொடர்ந்து அவமானங்கள் நிகழ்வாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசினர். அதே போல இந்தப் போட்டியிலும் காயம் என்ற பெயரில் அவரை மும்பை நிர்வாகம் கழற்றி விட்டுள்ளதாக ரசிகர்கள் சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இதையும் படிங்க: மீண்டும் சி.எஸ்.கே அணிக்கு கேப்டனாகும் தல தோனி.. மைக் ஹஸ்ஸி அளித்த பேட்டி – எப்படி சாத்தியம்?
மொத்தத்தில் இந்தப் போட்டியில் விலகியதன் காரணமாக 3 வருடங்கள் கழித்து மும்பை அணிக்காக ரோஹித் ஒரு ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் தவற விட்டுள்ளார். கடைசியாக 2022ஆம் ஆண்டு இதே போல அவர் ஒரு போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இளம் வீரர் ராஜ் பாவா இந்தப் போட்டியில் அறிமுகமாக விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.