ரோஹித் சர்மா ஒரு பலவீனமான குழப்பமான கேப்டன் – முன்னாள் பாக் வீரரின் கருத்தால் ரசிகர்கள் கொந்தளிப்பு

Rohith
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையில் வெல்வதற்காக 5 ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன்ஷிப் அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா தலைமையில் இந்தியா தயாராகி வருகிறது. கடந்த வருடம் துபாயில் நடந்த உலகக்கோப்பையில் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் வரலாற்று தோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய பின் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற அவரது தலைமையில் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்விடடையாமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா தற்போது 2022 ஆசிய கோப்பையில் விளையாடி வருகிறது.

அதில் கடந்த வருடம் வரலாற்று தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானை அதே துபாய் மைதானத்தில் போராடி தோற்கடித்த நடப்பு சாம்பியன் இந்தியா 2வது போட்டியில் ஹாங்காங்கை எளிதாக தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் அவரது தலைமையில் தோல்வியின் பிடியில் சிக்கினாலும் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராட வேண்டும் என்ற அதிரடி பாதையில் பயணித்து வரும் இந்தியா அதன் பயனாக கடந்த 2016க்குப்பின் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறி உலகக்கோப்பையை வெல்லும் அணியாக மாறி வருகிறது.

- Advertisement -

அற்புதமான கேப்டன்:
இந்த அணியை வழிநடத்தி வரும் கேப்டன் ரோகித் சர்மா வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஜாம்பவானாக போற்றபபடும் அளவுக்கு பேட்டிங்கில் ஏராளமான ரன்களையும் சாதனைகளையும் வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இருப்பினும் சமீப காலங்களில் பெரிய அளவில் ரன்களை குவிக்க தடுமாறும் அவர் கேப்டன்ஷிப் செய்வதில் தங்கமாக செயல்படுகிறார். ஏற்கனவே 5 ஐபிஎல் கோப்பையை வென்று தோனியை மிஞ்சி வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் அதன் வாயிலாக இன்று 3 வகையான இந்திய அணியின் கேப்டனாகும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.

குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இதுவரை 37 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்துள்ள அவர் உலகிலேயே அதிகபட்சமாக 83.3% என்ற உச்சபட்ச வெற்றி சராசரியில் 31 வெற்றிகளை பதிவு செய்துள்ளதே அவரின் தங்கமான கேப்டன்ஷிப்புக்கு சான்றாகும். இந்நிலையில் ரோகித் சர்மா ஒரு குழப்பமும் கவலையும் கொண்டுள்ள பலவீனமான கேப்டன் என்று தெரிவித்துள்ள முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ் அவரால் நீண்ட காலம் இந்தியாவுக்கு கேப்டனாக செயல்பட முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

கடுமையான விமர்சனம்:
இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “டாஸ் வீசும்போது ரோகித் சர்மாவின் பாடி லாங்குவேஜை நாம் பார்த்தால் அது மிகவும் பலவீனமாக உள்ளது. அவரிடம் ஏதோ ஒரு கவலையும் குழப்பமும் உள்ளது. ஆனால் ஆரம்ப காலங்களில் ரோகித் சர்மா அழகாக விளையாடியபோது இதுபோன்ற பதற்றத்தை அவரிடம் நான் பார்த்ததில்லை. அனேகமாக கேப்டன்ஷிப் அவருக்கு அழுத்தத்தை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன். அதனால் அவர் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார். அதனால் அவருடைய சொந்த பார்மும் பாதித்துள்ளது”

“சமீபத்திய ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்ட அவரிடம் சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அந்தப் பழைய தொடர்ச்சியான ஆட்டத்தை பார்க்க முடியவில்லை. மேலும் விளையாடும் விதம் மற்றும் நேர்மறையாக விளையாடுவது போன்றவற்றை பற்றி அவர் நிறைய பேசுகிறார். ஆனால் அவரின் திட்டங்கள் மற்றும் கேப்டன்ஷிப் அணியில் எதிரொலிபபதாக தெரியவில்லை. அவருடைய பாடி லாங்குவேஜிலும் எதிரொலிக்கவில்லை”

- Advertisement -

“அதனால் ரோகித் சர்மா நீண்டகாலம் கேப்டனாக செயல்படுவார் என்று எனக்கு தோன்றவில்லை. சுற்றியுள்ள விஷயங்களால் அவர் சுமாரான பார்மில் தவிக்கிறார் என்பதை நான் உணர்கிறேன். ஏனெனில் நானும் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்டுள்ளேன். ரோகித் சர்மா எப்பொழுதும் சுதந்திரமாக செயல்படுவதை நான் விரும்பிப் பார்ப்பேன். ஆனால் தற்போது அவர் அவ்வாறு செயல்படவில்லை. அவர் பார்ப்பதற்கு அழுத்தத்தால் காணாமல் போனவரை போல் உள்ளார். அவருக்காக நான் வருந்துகிறேன்.

எனவே விரைவில் அவர் முக்கிய முடிவை எடுக்க வேண்டும். ஏனெனில் அவர் இன்னும் நிறைய கிரிக்கெட் விளையாடி இந்தியாவுக்கு பங்காற்ற முடியும் என நான் உணர்கிறேன். கேப்டனாக பொறுப்பேற்றது முதல் அவர் வீழ்ச்சியை சந்தித்துள்ளார்” என்று கூறினார். அதாவது கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பெரிய அளவில் ரன்களை குவிக்க ரோஹித் சர்மா தடுமாறுவதாக தெரிவிக்கும் முகமது ஹபீஸ் அதிலிருந்து விடுபட கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்வதைப் பற்றி யோசிக்குமாறு கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஸ்பின்னர்கள் செய்யும் இந்த தவறு மிகப்பெரிய கிரைம் – வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் வருத்தம்

ஆனால் ரோஹித் சர்மா சுமாரான பார்மில் இருக்கிறார் என்பது உண்மை என்றாலும் அதற்காக அவர் கவலையும் குழப்பமும் கொண்ட பலவீனமான கேப்டன் என்று முகமது ஹபீஸ் விமர்சிப்பது நிறைய இந்திய ரசிகர்களை கொந்தளிக்க வைக்கிறது.

Advertisement