உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. அதில் சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி கிரிக்கெட் தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது. முன்னதாக உலகக் கோப்பையை வென்று கொடுக்கவில்லை என்பதற்காக பதவி விலகிய விராட் கோலிக்கு பின் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றார் என்ற காரணத்திற்காக ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்றார்.
அவரது தலைமையில் இருதரப்பு தொடர்களில் வென்ற இந்தியா 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்து 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலிலும் தோற்றது. மேலும் சமீப காலங்களில் பேட்ஸ்மேனாகவும் சுமாராகவே செயல்பட்டு வரும் அவர் தன் மீதான விமர்சனங்களுக்கு இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு கேப்டனாக கோப்பையை வென்று பதிலடி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளார் என்றே சொல்லலாம்.
ரோஹித் நெகிழ்ச்சி:
பொதுவாக சர்வதேச அரங்கில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும் தங்களுடைய நாட்டுக்காக உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே மிகப்பெரிய லட்சிய கனவாக இருக்கும். அந்த வகையில் 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற ரோஹித் சர்மா 50 ஓவர் உலக கோப்பையை இன்னும் ஒரு முறை கூட வெல்லவில்லை. குறிப்பாக 2019 உலகக்கோப்பையில் 5 சதங்கள் அடித்து உலக சாதனை படைத்த அவர் செமி ஃபைனலில் சொதப்பியதால் 2015 போலவே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டார்.
இருப்பினும் தற்போது 36 வயதை கடந்து விட்ட அவர் இந்த கடைசி முயற்சியில் கேப்டனாக சொந்த ரசிகர்கள் ஆதரவுடன் கோப்பையை வெல்ல முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்திய ஐசிசி நிகழ்ச்சியில் உலக கோப்பையை முதல் முறையாக அருகில் பார்த்து தொட்டு தூக்கி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அவர் அந்த விவரிக்க முடியாத தருணத்தில் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இதை நான் இவ்வளவு அருகே பார்த்ததில்லை. குறிப்பாக 2011 உலக கோப்பையை வென்றும் இந்திய அணியில் நான் இல்லாததால் கோப்பையை பார்க்க முடியவில்லை”
“இது மிகவும் அழகாக இருக்கிறது. இந்த கோப்பைக்கு பின்புலத்தில் ஏராளமான நினைவுகளும் வரலாறும் இருக்கிறது. எனவே இந்த அழகான கோப்பையை நாங்கள் வெல்வோம் என்று நம்புகிறேன். இந்த தொடரில் நாங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு மைதானத்திற்கு சென்று விளையாட இருப்பதால் அங்குள்ள ரசிகர்கள் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுப்பார்கள். குறிப்பாக 12 வருடங்கள் கழித்து உலகக்கோப்பை இந்தியாவுக்கு வந்துள்ளதால் அதை வெல்வதற்கு அனைவரும் ஆவலுடன் முன்னோக்கி காத்திருக்கிறோம்”
“கடைசியாக நாங்கள் எங்களுடைய சொந்த மண்ணில் 2011இல் ஒரு உலக கோப்பையில் விளையாடினோம். 2016இல் டி20 உலகக்கோப்பையில் விளையாடினாலும் 50 ஓவர் உலகக் கோப்பை 12 வருடங்கள் கழித்து இந்தியாவுக்கு வந்துள்ளதால் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாங்கள் அனைத்து மைதானங்களிலும் சிறப்பாக செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறோம்”
“2003 உலக கோப்பையில் ஃபைனல் தவிர்த்து சச்சின் டெண்டுல்கரின் அபாரமான ஆட்டத்தால் இந்தியா சிறப்பாக செயல்பட்டது. 2007 தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது துரதிஷ்டவசமாக அமைந்தாலும் 2011 மறக்க முடியாததாக அமைந்தது. குறிப்பாக அதை நான் என்னுடைய வீட்டில் ஒரு பந்து விடாமல் பார்த்தேன். அந்த தொடரில் விளையாடதற்காக ஏமாற்றம் இருந்ததால் ஆரம்பத்தில் பார்க்க கூடாது என்று நினைத்தேன்”
இதையும் படிங்க:ப்ளானிங்னா இப்டி இருக்கணும், நட்சத்திர வீரரை கழற்றி விட்டு – 2023 உ.கோ அணியை இப்போதே கெத்தாக அறிவித்த ஆஸி வாரியம்
“ஆனால் நமது நாடு விளையாடுவதை நான் தொடர்ந்து பார்த்த நிலையில் நாக் அவுட் சுற்றில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். மேலும் 2015, 2019 தொடரில் நான் விளையாடி சிறப்பாக செயல்பட்டும் செமி ஃபைனலில் தோல்வியை சந்தித்தோம். இருப்பினும் இம்முறை நாங்கள் சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு வெல்வோம் என்று நம்புகிறேன். இது டெஸ்ட் கிரிக்கெட்டை போல ஒரு மணி நேரத்தில் தடுமாறினாலும் வெற்றியை பறிக்காது. மாறாக ஒரு மாதம் முழுவதும் தொடர்ச்சியாக நல்ல கிரிக்கெட்டை விளையாடி போட்டி நாளன்று சிறப்பாக செயல்பட்டு வெற்றி காண வேண்டும்” என கூறினார்.