வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து 2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடும் இந்தியா ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா போன்ற முதன்மை வீரர்களுடன் களமிறங்குவதால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்திப்பதற்கு ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராக செயல்பட்டது தோல்வியை கொடுத்தது. அதனால் பலவீனமான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அந்த இருவருமே சதமடித்து நிறைய சாதனைகள் படைத்த போது பாராட்டுவதற்கு பதிலாக இந்திய ரசிகர்களே கலாய்த்தனர். அதிலும் தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரர் என்பது போன்ற நிறைய சாதனைகளைப் படைத்த விராட் கோலி மீது ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சனத்தையே வைத்தனர்.
ரோஹித் பதிலடி:
குறிப்பாக 2018க்குப்பின் ஒரு வழியாக 5 வருடங்கள் கழித்து முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் சதமடித்த அவர் எப்போதுமே சொந்த மண்ணில் மட்டுமே அசத்தக்கூடியவர் என்ற விமர்சனங்கள் இருந்தன. இருப்பினும் அதற்கு தாம் அடித்துள்ள 29 டெஸ்ட் சதங்களில் 15 வெளிநாட்டு மண்ணில் அடித்துள்ளேன் என்று 2வது போட்டியின் முடிவில் விராட் கோலியே விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் விராட் கோலி மட்டுமின்றி இந்திய வீரர்கள் பற்றி வெளியில் விமர்சிப்பவர்களை நாங்கள் எப்போதும் கருத்தில் கொள்வதில்லை என்று மீண்டும் மீண்டும் சொல்வதாக கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
குறிப்பாக வெளியில் இருப்பவர்களுக்கு அணிக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாது என தெரிவிக்கும் அவர் இது பற்றி முதல் ஒருநாள் போட்டிக்கு முன் பேசியது பின்வருமாறு. “இந்த கேள்விக்கான பதிலை நான் பலமுறை கொடுத்து விட்டேன். அதாவது வெளியில் எங்களை பற்றி என்ன பேசுகிறார்கள் என்பதில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. ஏனெனில் அணிக்குள் என்ன நடக்கிறது நாங்கள் என்ன பேசுகிறோம் என்பது பற்றி அவர்களுக்கு தெரியாது. எனவே எங்களுடைய கவனம் எப்போதும் எப்படி ஒரு வீரரிடம் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வந்து இந்தியாவுக்காக வெற்றிகளை காணலாம் என்பதிலேயே இருக்கிறது”
“அந்த வகையில் தற்போது இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் எங்களுடைய கவனம் இருக்கிறது. அதில் அனைத்து வீரர்களுக்கும் தேவையான வாய்ப்புகளை வழங்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். மேலும் இந்த அணியில் சில வீரர்கள் ஏற்கனவே நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளதால் அவர்களுக்கு எதைப்பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் அவர்களிடம் சென்று போட்டியின் விவரங்கள் பற்றி சொல்லத் தேவையில்லை”
“மாறாக புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்கள் எவ்வித அழுத்தமின்றி விளையாடுவதற்கு தேவையான சுதந்திரத்தை கொடுப்பதே எங்களுடைய வேலையாகும். மேலும் உலக கோப்பையில் விளையாட நிறைய வீரர்கள் போட்டி போடுவதால் அவர்களில் சரியானவர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலாக இருக்கிறது. குறிப்பாக பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் எங்களுக்காக நிறைய வீரர்கள் விளையாட காத்திருக்கின்றனர்”
இதையும் படிங்க:இப்படி பண்ணா நாங்க எப்படி விளையாட முடியும். வெ.இ.சில் இந்திய வீரர்கள் தவிப்பு – பி.சி.சி.ஐ தான் முடிவு எடுக்கனும்
“அதனால் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் ஆகியோருக்கு சரியானவர்களை தேர்ந்தெடுப்பது மிகவும் சவாலான காரியமாக இருந்து வருகிறது. எனவே குறிப்பிட்ட வேளையில் யார் சரியாக பொருந்துகிறார்களோ அவர்களையே நாங்கள் தேர்ந்தெடுக்க உள்ளோம்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஜூலை 27ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு மணிக்கு பார்படாஸ் நகரில் துவங்குவது குறிப்பிடத்தக்கது.