ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் பங்கேற்காத ரோகித் சர்மா அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் போது மீண்டும் இந்திய அணியின் கேப்டனாக அணியுடன் இணைந்தார். அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்கவே இந்திய அணியின் மீது அதிக விமர்சனங்கள் எழுந்தது.
ஓய்வை அறிவிக்கப் போகிறாரா ரோஹித் சர்மா? :
அதோடு கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. கடந்த பல டெஸ்ட் போட்டிகளாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியிலாவது சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இன்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் இன்னிங்க்ஸை விளையாடியது.
இந்த முதல் இன்னிங்சில் ஆறாவது வீரராக ரோஹித் சர்மா களத்திற்கு வந்தார். இந்த போட்டியிலாவது தனது பார்மை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 27 பந்துகளை சந்தித்த ரோஹித் இரண்டு பவுண்டரிகளுடன் 10 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சறுக்களை சந்தித்த ரோஹித் தற்போது மூன்றாவது போட்டியிலும் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது அனைவரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் ஆட்டமிழந்த பின்னர் ஓய்வறையை நோக்கி சென்ற ரோகித் சர்மா தனது கிளவுசை அவிழ்த்து பவுண்டரி லைனில் எல்லையில் மைதானத்தில் வைத்துவிட்டு ஓய்வறைக்குள் சென்றார்.
இதன் மூலம் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவிக்கப் போகிறாரோ என்று ரசிகர்கள் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர். அதற்கு காரணம் யாதெனில் : இனி தான் பேட்டிங் செய்ய களத்திற்கு வரமாட்டேன் என்பதற்காகவே கிளவுசை அவிழ்த்து மைதானத்தின் ஓரத்தில் வைத்துவிட்டு ரோகித் சென்றுள்ளார். இது அவரது ஓய்வை குறிக்கும் ஒரு அறிகுறிதான். எனவே நிச்சயம் ரோஹித் சர்மா ஓய்வு அறிவிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் தங்களது யூகங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : ஆகாஷ் தீப் அடித்த பவுண்டரி.. துள்ளி குதித்த கம்பீர் மற்றும் விராட் கோலி – நடந்தது என்ன?
மேலும் ரோகித் சர்மா தனது ஓய்வு அறிவிக்க இதுதான் சரியான நேரம் என்றும் சுட்டிக்காட்டி வருகின்றனர். ஒருவேளை இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியுடன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்து விட்டால் எஞ்சியுள்ள தொடரிலிருந்து இந்திய அணியின் அடுத்த கேப்டனாக பும்ரா செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.



