இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி காபா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் நான்காம் நாளான இன்று போட்டி முடிவடைந்த வேளையில் இந்திய அணி இன்னும் ஆஸ்திரேலிய அணியை விட 193 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 445 ரன்களை குவித்தது.
பாலோ ஆனை தவிர்த்த இந்திய அணி :
அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியினர் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியின் போது கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் அரைசதம் அடித்து அசத்திய வேளையில் இந்திய அணி எளிதாக ஃபாலோ ஆனை தவிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழவே இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க கடுமையாக போராடியது. அந்த வேளையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி தற்போது வரை 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக பாலோ ஆனை தவிர்க்க நான்கு ரன்கள் தேவைப்பட்டபோது வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் தேர்டு மேன் திசையில் பவுண்டரி ஒன்றினை அடித்தார். அதனை கண்ட இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர்.
மேலும் பாலோ ஆனை தவிர்த்ததால் அவர்கள் பெரிய அளவில் ஆரவாரம் செய்தனர். இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒருவேளை இந்திய அணி இந்த போட்டியில் பாலோ ஆனை தவிர்க்கவில்லை என்றால் நிச்சயம் நாளை எஞ்சியுள்ள ஒருநாள் ஆட்டத்தில் 10 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி எளிதாக எடுத்து விடும் என்பதனாலே இந்த கொண்டாட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இந்திய அணிக்கெதிரான எஞ்சியுள்ள தொடரிலிருந்து வெளியேறிய ஆஸ்திரேலிய வீரர் – இந்திய அணிக்கு சாதகம்
நாளைய போட்டியில் இந்திய அணி மீதமுள்ள ஒரு விக்கெட்டை இழந்த பின்னர் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வேண்டிய வரும். அப்படி இருக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்த போட்டியில் இந்திய அணி டிரா செய்ய அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



