ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பஞ்சாப்பை 6 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் 17 வருடங்கள் தொடர்ச்சியாக சந்தித்த தோல்விகளை நிறுத்திய பெங்களூரு முதல் கோப்பையை வென்று சாதனைப் படைத்தது. மறுபுறம் போராடி தோற்ற பஞ்சாப் முதல் கோப்பையை முத்தமிடும் வாய்ப்பை கோட்டை விட்டது. அந்த வெற்றியை விராட் கோலி கண்ணீர் மல்க உணர்ச்சிகரமாக கொண்டாடினார்.
அப்படி கொண்டாடிக் கொண்டிருந்த அவரிடம் முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் பேட்டி எடுத்தார். அப்போது ஆர்சிபி அணிக்காக களத்தில் தம்முடைய அனைத்தையும் கொடுக்க விரும்புவதாக விராட் கோலி சொன்னார். அடுத்த வரியில் சிலரைப் போல் இம்பேக்ட் வீரராக அல்லாமல் முழுமையாக 20 ஓவர்கள் விளையாட விரும்புவதாகவும் விராட் கோலி கூறினார்.
கிண்டல் செய்தாரா கோலி:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு எப்போதும் கிடைக்கப் போவதில்லை. என்னுடைய கேரியருக்கும் ஒருநாள் முடிவு வரும் என்பது உங்களுக்குத் தெரியும். அப்படி எனது கேரியரை முடித்து விட்டு வீட்டில் இருக்கும் போது என்னிடம் இருக்கும் அனைத்தையும் கொடுத்து விட்டேன் என்று நான் சொல்ல வேண்டும்”
“அதை சொல்ல வேண்டுமெனில் என்னால் இம்பேக்ட் வீரராக விளையாட முடியாது. மாறாக 20 ஓவர்களும் முழுமையாக விளையாடி களத்தில் இம்பேக்ட் ஏற்படுத்த விரும்புகிறேன். நான் அப்படிப்பட்ட வீரர். அது போன்ற திறமையில் கடவுள் என்னை ஆசீர்வதித்துள்ளார். அதை வைத்து நீங்கள் பல்வேறு வழிகளைக் கண்டறிந்து அணிக்கு உதவ வேண்டும்” என்று கூறினார்.
ரசிகர்கள் அதிருப்தி:
இதைப் பார்த்த மும்பை ரசிகர்கள் ரோகித் சர்மாவை தான் விராட் கோலி மறைமுகமாக கிண்டல் செய்வதாக அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள். ஏனெனில் விராட் கோலியை விட ஒரு வயது மூத்த ரோஹித் சர்மா நல்ல ஃபிட்னஸ் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் அவர் இந்தியாவுக்காக முழுமையாக 20 ஓவர்கள் விளையாடி 2024 டி20 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சாதனை படைத்தார்.
இதையும் படிங்க: 4 விருதுகளை அள்ளிய தமிழக நாயகன் சாய் சுதர்சன்.. கில்லை முந்தி இளம் சூப்பர்ஸ்டாராக சாதனை
ஆனாலும் அவரிடம் ஐபிஎல் தொடருக்கு தேவையான ஃபிட்னஸ் இல்லை என்று கருதிய மும்பை நிர்வாகம் இத்தொடர் முழுவதும் ரோஹித் சர்மாவை இம்பேக்ட் வீரராக பயன்படுத்தியது. அதனால் பெரும்பாலான நேரங்களில் பெஞ்சில் அமர்ந்திருந்த ரோகித் சர்மா சில சமயங்களில் கூல்ட்ரிங்ஸ் தூக்கினார். அந்த சூழ்நிலையில் விராட் கோலி தெரிவித்துள்ள இந்த கருத்து ரோஹித் சர்மாவை கிண்டல் செய்வது போல் இருப்பதாக ஹிட்மேன் மற்றும் மும்பை ரசிகர்கள் சமூக வலைதலங்களில் கோபத்தை வெளிப்படுத்துகின்றனர்



