இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டியானது நேற்று கொழும்பு நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இலங்கை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 248 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பாக அதிகபட்சமாக அவிஸ்கா பெர்னாண்டோ 96 ரன்களை குவித்தார்.
இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அறிமுகமான இளம் வீரர் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதனை தொடர்ந்து 249 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது இலங்கை அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 138 ரன்களுக்கு சுருண்டது.
இதன் காரணமாக இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடிய ரோகித் சர்மா 20 பந்துகளை சந்தித்து 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இருப்பினும் அவர் இந்த போட்டியில் அடித்த ஒரு சிக்ஸர் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான கிரிஸ் கெயிலின் மாபெரும் சாதனை ஒன்றை சமன் செய்து அசத்தியுள்ளார். அதன்படி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் இரண்டாவது இடத்திலிருந்து கிரிஸ் கெயிலின் சாதனையை தற்போது ரோகித் சர்மா சமன் செய்துள்ளார்.
இதுவரை இந்திய அணிக்காக 265 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 257 இன்னிங்சில் விளையாடி 331 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஏற்கனவே கிரிஸ் கெயில் 301 போட்டியில் விளையாடி 294 இன்னிங்சில் விளையாடி 331 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.
இதையும் படிங்க : பைத்தியக்காரத்தனம்.. 3 போட்டிக்கு முன் கேப்டனாக இருந்த அவர் இப்போ டீம்லயே இல்ல.. கம்பீரை விமர்சித்த முன்னாள் வீரர்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாஹித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



