- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சுயநலமின்றி இந்தியாவுக்காக ஆஸியை வெளுத்த ரோஹித்.. யுவராஜின் 17 வருட சாதனையை உடைத்து 2 சாதனை

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையின் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக தங்களுடைய கடைசி சூப்பர் 8 போட்டியில் ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 205/5 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை சமன் செய்தது.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 92 (41) ரன்கள் எடுத்தார். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த ஆஸ்திரேலியா முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 181/7 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

ரோஹித்தின் இரட்டை சாதனை:
அதனால் ஜூன் 27ஆம் தேதி கயானாவில் நடைபெறும் செமி ஃபைனலில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. முன்னதாக இந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே விராட் கோலி டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். ஆனால் அவருக்கும் சேர்த்து எதிர்ப்புறம் ஆஸ்திரேலிய பவுலர்களை ரோகித் சர்மா அடித்து நொறுக்கினார். குறிப்பாக தரமான மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக 4வது ஓவரில் 6, 6, 4, 6, 0, 6 என அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட அவர் 28 ரன்கள் அடித்தார்.

இதன் வாயிலாக மிட்சேல் ஸ்டார்க்கிற்கு எதிராக ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற அற்புதமான சாதனையும் அவர் படைத்தார். அதே வேகத்தில் வெளுத்து வாங்கிய அவர் 7 பவுண்டரி 8 சிக்ஸருடன் தன்னுடைய சதத்தை பற்றி கவலைப்படாமல் 92 (41) ரன்களை விளாசி அவுட்டானார். இதன் வாயிலாக ஒரு டி20 உலக கோப்பை போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங் சாதனையை உடைத்த ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்தார்.

- Advertisement -

இதற்கு முன் கடந்த 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்ஸர் உட்பட 7 சிக்ஸர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இது போக இப்போட்டியில் ரோகித் சர்மா 92 ரன்களை 224.39 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். இதன் வாயிலாக ஒரு டி20 உலகக்கோப்பை போட்டியில் 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையும் ரோஹித் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: சக வீரரை நோக்கி பேட்டை தூக்கி எறிந்து கோபத்தை வெளிப்படுத்திய ரஷீத் கான் – என்ன நடந்தது?

இதற்கு முன் 2007 டி20 உலகக் கோப்பை செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக யுவராஜ் சிங் 233.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 70 (30) ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அவருடைய இந்த சுயநலமற்ற ஆட்டத்திற்கு ஆட்டநாயகன் விருதும் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் வாயிலாக டி20 உலகக் கோப்பையில் ஆட்டநாயகன் விருது வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற விராட் கோலி, தோனி நிகழ்த்தாத சாதனையும் ரோஹித் படைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -