
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்று விட்டார். அதனை தொடர்ந்து தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2027 உலக கோப்பை தொடர் வரை தான் விளையாட வேண்டும் என்று விருப்பத்தை தெரிவித்துவிட்டு தொடர்ச்சியாக இந்திய ஒருநாள் அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் அவருக்கு இடம் வழங்கப்பட்டது.
அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட ரோகித் சர்மா முதல் இரண்டு போட்டிகளிலும் நல்ல துவக்கம் கிடைத்தும் பெரிய ரன்களுக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அளித்தார். ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் 69 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 79 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை அளித்தார்.
அவரது இந்த சிறப்பான துவக்கம் இந்திய அணியை எளிதாக வெற்றியை நோக்கியும் கொண்டு சென்றது. இதற்கடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் ரோஹித் சர்மாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் அவர் அடித்த அரைசதம் மூலம் முன்னாள் இந்திய வீரரான மொஹிந்தர் அமர்நாத்தின் மாபெரும் சாதனை ஒன்றினையும் முறியடித்துள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஏற்கனவே ஒருநாள் போட்டிகளில் அதிக வயதில் விளையாடிய வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் இருந்த மொஹிந்தர் அமர்நாத்தை ரோகித் சர்மா கடந்த முதல் போட்டியின் போது பின்னுக்கு தள்ளியிருந்தார். இவ்வேளையில் இந்திய அணி சார்பாக அதிக வயதில் ஒருநாள் போட்டிகளில் அரைசதம் அடித்த வீரராக மொஹிந்தர் அமர்நாத் முதல் இடத்தில் இருந்தார். அவரது அந்த சாதனையையும் தற்போது ரோகித் சர்மா பின்னுக்கு தள்ளியுள்ளார்.
இதையும் படிங்க : வீரேந்தர் சேவாக்கின் மாபெரும் சாதனையை முறியடித்த ஹிட் மேன் ரோஹித் சர்மா – விவரம் இதோ
மொஹிந்தர் அமர்நாத் தனது 39-ஆவது வயது 21-வது நாளில் கடந்த 1989-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அரைசதம் அடித்திருந்தார். அதுவே இதுவரை சாதனையாக இருந்து வந்தது. இவ்வேளையில் தனது 39-ஆவது வயது 51-வது நாளில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ரோஹித் சர்மா அரைசதம் கடந்து ஒருநாள் போட்டியில் அதிக வயதில் அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.