தென்னாபிரிக்காவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்துள்ளது. ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் முதல் போட்டியில் மோசமாக விளையாடிய இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்து தென்னாபிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது.
அதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் கேப் டவுன் நகரில் நடைபெற்ற 2வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவை முதல் இன்னிங்ஸில் 55 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்தியா பின்னர் 153 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 176 ரன்கள் மட்டுமே எடுத்ததால் கடைசியில் 79 ரன்களை சேசிங் செய்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியை பெற்றது.
அசத்திய கேப்டன்:
அதனால் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்த்த இந்தியா வலுவான தென் ஆப்பிரிக்காவை முழுமையாக வெற்றி பெற விடாமல் கோப்பையை பகிர்ந்து கொண்டு தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது. மேலும் 2010/11க்குப்பின் 13 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை சமன் செய்து இந்தியா சாதனையும் படைத்துள்ளது.
கடைசியாக ஜாம்பவான் எம்எஸ் தோனி தலைமையில் 1 – 1 (3) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவில் தொடரை சமன் செய்த இந்தியா தற்போது ரோகித் சர்மா தலைமையில் கோப்பையை பகிர்ந்து கொண்டுள்ளது. இதன் வாயிலாக தென்னாப்பிரிக்காவில் ஒரு டெஸ்ட் தொடரை ட்ரா செய்த இந்திய கேப்டன் என்ற தோனியின் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்து அசத்தியுள்ளார்.
1992 முதல் 2021 வரை முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோரது தலைமையில் தென்னாப்பிரிக்காவில் தோல்வியை மட்டுமே சந்தித்த இந்தியா மகத்தான கேப்டனாக சாதனை படைத்த விராட் கோலி தலைமையில் கூட 2 முறை 2 – 1 (3) என்ற கணக்கில் போராடி தோற்றது. இருப்பினும் தோனிக்கு பின் தற்போது தொடரை சமன் செய்துள்ள ரோஹித் தன்னுடைய டெஸ்ட் கேப்டன்ஷிப் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 30 வருடங்கள்.. பாகிஸ்தான் போன்ற ஆசிய அணிகள் செய்யாத.. மாஸ் சாதனை படைத்த இந்தியா
அதை விட 2வது போட்டி நடைபெற்ற கேப் டவுன் மைதானத்தில் இதற்கு முன் முகமது அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், அர்ஜுனா ரணதுங்கா, சனாத் ஜெயசூர்யா வகார் யூனிஸ், ராகுல் டிராவிட், இன்சமாம்-உல்-ஹக், எம்எஸ் தோனி, திலகரத்னே தில்சன், மிஸ்பா-உல்-ஹக், அஞ்சேலோ மேத்யூஸ், விராட் கோலி சர்பராஸ் கான் என இந்தியா இலங்கை, பாகிஸ்தான் ஆகிய ஆசிய நாடுகளைச் சேர்ந்த எந்த கேப்டனும் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றியை பதிவு செய்ததில்லை. ஆனால் தற்போது அவர்களையெல்லாம் மிஞ்சியுள்ள ரோகித் சர்மா கேப் டவுன் மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்காவை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த முதல் ஆசிய கேப்டன் என்ற மகத்தான சாதனையும் படைத்துள்ளார்.