இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் குவித்தது. பின்னர் 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது ஆஸ்திரேலிய அணியானது விளையாடி வருகிறது.
ஷ்ரேயாஸ் ஐயருடன் வாக்குவாதம் செய்த ரோஹித் சர்மா :
இந்தப் போட்டியின் போது இந்திய அணி முதலில் 2 விக்கெட்டுகளை இழந்து தவித்த நிலையில் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது ஜோடி மிகச் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து 118 ரன்கள் சேர்த்து இந்திய அணியை ஓரளவு நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர்.
அதிலும் குறிப்பாக இந்த போட்டியில் ரோகித் சர்மா 73 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 61 ரன்களையும் குவித்து இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் அடித்த வீரர்களாகவும் திகழ்ந்தனர். அவர்கள் இருவரது இந்த ஆட்டமே இந்திய அணி 250 ரன்களை கடந்து செல்ல உதவியது என்றால் மிகையல்ல.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா களத்தில் ஷ்ரேயாஸ் ஐயருடன் ஒரு சிங்கிளுக்காக வாக்குவாதம் செய்த விடயம் ஸ்டம்ப் மைக் மூலமாக வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இடையே என்ன நடந்தது? என்பது குறித்த சில தகவல்களை இங்கு காணலாம்.
அந்தவகையில் குறிப்பிட்ட அந்த பந்தை தட்டிவிட்ட ரோஹித் சர்மா ஷ்ரேயாஸ் ஐயரை நோக்கி “இது ஒரு சிங்கிள்”, நீ ஏன் ஓடி வரவில்லை? என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ஷ்ரேயாஸ் : “நீங்கள் தான் என்னை அழைத்து இருக்க வேண்டும்” என்னை நோக்கி பார்க்காமல் சத்தமாக அழையுங்கள் என்று கூறினார். உடனே ரோஹித் அதற்கு :
“நீ தான் முதலில் என்னை அழைக்க வேண்டும்” என்று கூறினார். உடனே ஷ்ரேயாஸ் : “பவுலர் ஓடி வந்ததால் எனக்கு ஆங்கிள் சரியாக தெரியவில்லை” எனவே நீங்கள் என்னை அழைத்திருக்கலாம் என்று கூறினார். பிறகு மீண்டும் ரோகித் சர்மா அவரை நோக்கி “நான் அந்த அழைப்பை உனக்கு கொடுக்க முடியாது” நீதான் கவனித்திருக்க வேண்டும் என்று கூறினார்.
இதையும் படிங்க : டக் அவுட்டானாலும் விராட் கோலிக்கு மரியாதை கொடுத்த ரசிகர்கள்.. கோலி செய்த செயல் – நெகிழ்வைத்த சம்பவம்
உடனே ஷ்ரேயாஸ் ஐயரும் அவரை நோக்கி “பந்து உங்கள் முன்புதான் இருந்தது” எனக்கு சரியாக தெரியவில்லை. நீங்கள் அழைத்திருக்கலாமே என்பது போன்று கூறினார். இப்படி இவர்களுக்கிடையே சற்று காரசாரமான வாக்குவாதம் பார்வையாளர்கள் கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.



