வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா ஜூலை 20ஆம் தேதி ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற 2வது போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்து 438 ரன்கள் எடுத்து அசத்தியது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தன்னுடைய 500வது போட்டியில் சதமடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்து 121 ரன்கள் எடுக்க ரோகித் சர்மா 80, ஜெய்ஸ்வால் 58, ரவீந்திர ஜடேஜா 61, அஸ்வின் 56 என முக்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஜோமேல் வேரிக்கன், கிமர் ரோச் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் கிரைக் ப்ரத்வெய்ட் 75 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 123 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா மழையை கருத்தில் கொண்டு அதிரடியாக விளையாடி 181/2 ரன்கள் குவித்து விரைவாக டிக்ளேர் செய்தது.
மிரட்டல் சாதனை ஜோடி:
அதிகபட்சமாக கேப்டன் ரோகித் சர்மா 57 (44) ஜெய்ஸ்வால் 38 (30) இஷான் கிசான் 52* (34) என முக்கிய வீரர்கள் அனைவரும் நல்ல ரன்களை அதிரடியாக எடுத்தனர். அதைத்தொடர்ந்து 365 ரன்கள் துரத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அஸ்வின் சுழலில் கேப்டன் ப்ரத்வெய்ட் 28 ரன்களிலும் மெக்கன்சி டக் அவுட்டாக்கியும் ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 4வது நாள் முடிவில் 76/2 என தடுமாறும் அந்த அணிக்கு களத்தில் தக்நரேன் சந்தர்பால் 24*, ப்ளாக்வுட் 20* ரன்களுடன் உள்ளனர்.

முன்னதாக இந்த தொடரில் புதிதாக ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக 200 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிக ரன்கள் (229) குவித்த இந்திய ஜோடி என்ற சாதனையை படைத்தனர். மேலும் இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் 139 ரன்கள் குவித்த அந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் 2 முறை அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையும் படைத்தனர்.
அந்த நிலையில் 2வது இன்னிங்ஸில் வெறும் 5.3 ஓவர்களிலேயே 50 ரன்கள் சேர்த்த அவர்கள் 90 வருட இந்திய கிரிக்கெட்டில் அதிவேகமாக 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற வரலாற்றை படைத்தனர். இந்நிலையில் 229, 139, 98 என இந்த தொடரில் களமிறங்கிய 3 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தமாக 466 ரன்கள் குவித்துள்ள ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வெளிநாட்டு தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற ஆகாஷ் சோப்ரா – வீரேந்திர சேவாக் ஆகியோரின் 20 வருட ஆல் டைம் சாதனையை தகர்த்து புதிய வரலாறு படைத்துள்ளனர்.

அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா – யசஸ்வி ஜெய்ஸ்வால் : 466, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, 2023*
2. வீரேந்திர சேவாக் ஆகாஷ் சோப்ரா : 459, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2003/04
3. வீரேந்திர சேவாக் – ராகுல் டிராவிட் : 457, பாகிஸ்தானுக்கு எதிராக, 2006
4. சுனில் கவாஸ்கர் – சேட்டன் சவுகான் : 453, இங்கிலாந்துக்கு எதிராக, 1979
5. வீரேந்திர சேவாக் – கௌதம் கம்பீர் : 431 – இலங்கைக்கு எதிராக, 2008
இதையும் படிங்க:IND vs WI : கும்ப்ளே ஹர்பஜன் ஜோடியின் தனித்துவமான சாதனையை தொட்ட அஷ்வின் ஜடேஜா ஜோடி – செம ரெக்கார்ட் தான்
இப்படி முதல் சேர்க்கையிலேயே நிறைய சாதனைகளை படைத்த இந்த ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக முதல் 100 ரன்கள் (12.2 ஓவர்கள்) அடித்த அணி என்ற உலக சாதனையை இந்தியா படைப்பதற்கும் உதவியது குறிப்பிடத்தக்கது.



