ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய அடுத்தடுத்த 4 கோப்பைகளை வென்ற முதல் அணியாக சாதனை படைத்த இந்தியா ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் 90% உறுதி செய்தது. மறுபுறம் 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரில் வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஆரம்பத்திலேயே கோப்பை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டு விமர்சனங்களுக்கு உள்ளானது.
அதனால் குறைந்தபட்சம் அடுத்த 2 போட்டிகளில் வென்று ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டு நல்ல நிலையில் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கியை இத்தொடரின் 3வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி சுமாரான ஃபார்மில் தவிக்கும் கேஎல் ராகுலுக்கு பதிலாக சுப்மன் கில் மற்றும் முகமது ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டனர்.
திணறும் இந்தியா:
அதை தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா காயத்திலிருந்து குணமடைந்து திரும்பிய ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் ஒரு பந்தில் எட்ஜ் கொடுத்தார். அதற்கு ஆஸ்திரேலியா அணியினர் அவுட் கேட்ட போது நடுவர் கொடுக்க மறுத்து விட்டார். அந்த பரபரப்பில் ஒருவேளை அது அவுட் இருக்காதோ என்று கருதிய ஆஸ்திரேலியா அணியினர் ரிவ்யூ எடுக்கவில்லை. ஆனால் பெரிய திரையில் பார்க்கும் போது ரோகித் சர்மா எட்ஜ் கொடுத்தது தெளிவாகத் தெரிந்ததை அறிந்து ஆஸ்திரேலிய அணியினர் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
அதே ஓவரிலேயே மற்றொரு பந்தில் எல்பிடபிள்யு முறையில் முறையில் அவுட் கேட்டும் மீண்டும் நடுவர் அவுட் கொடுக்காததால் ரோகித் சர்மா தப்பித்தார். ஏனெனில் ரிப்ளையில் பார்க்கும் போது பந்து தெளிவாக ஸ்டம்ப்களை அடித்ததை பார்த்து மீண்டும் ஆஸ்திரேலிய அணியினர் ஏமாற்றத்தை சந்தித்தனர். ஆனால் அப்படி முதல் ஓவரிலேயே 2 அதிர்ஷ்டத்தை பெற்ற ரோகித் சர்மா அதை பயன்படுத்தாமல் மேத்தியூ குனேமான் வீசிய 5வது ஓவரில் இறங்கி அடிக்க முயற்சித்து ஸ்டம்பிங் முறையில் 12 ரன்களில் அவுட்டாகி சென்றார்.
அடுத்த சில ஓவர்களிலேயே ராகுல் இடத்தில் அதிரடியாக விளையாட முயற்சித்த சுப்மன் கில் 3 பவுண்டரியுடன் 21 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த புஜாரா 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்ற அவரைத் தொடர்ந்து வந்த ஜடேஜா 4 ரன்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 45/5 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவை மீட்டெடுக்க முயன்ற விராட் கோலி 22 ரன்களிலும் கேஎஸ் பரத் 17 ரன்களிலும் போராடி அவுட்டானார்கள்.
அதனால் முதல் நாள் உணவு இடைவெளியில் 84/7 என்ற நிலையுடன் தினமும் இந்தியா இப்போட்டியில் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. முன்னதாக நாக்பூர் மற்றும் டெல்லியில் நடைபெற்ற போட்டிகளில் சுழன்றதை விட இந்தப் போட்டியில் பந்து முதல் நாளின் முதல் மணி நேரத்திலேயே தாறுமாறாக சுலழ்வது இந்தியாவின் இந்த தடுமாற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்து வருகிறது. இந்த பிட்ச் சுழலும் என்று தெரிந்து தான் ஆரம்பத்திலேயே பெரிய ரன்களை அடித்து விட வேண்டும் என்ற எண்ணத்துடன் டாஸ் வென்ற ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
இதையும் படிங்க: IND vs AUS : 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் முகமது ஷமி ஏன் இடம்பெறவில்லை – ரோஹித் கொடுத்த விளக்கம்
ஆனால் முதல் மணி நேரத்திலேயே சுழலும் என்று அவரும் இந்திய ரசிகர்களும் எதிர்பார்க்கவில்லை. எனவே இந்த போட்டியில் இந்த மோசமான தொடக்கத்திலிருந்து மீண்டெழுந்து இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்ப ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.



