இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கான முதல் போட்டியில் இருந்து விலகியது ஏன்? என்பதே பலரது கேள்வியாகவும் இருந்து வந்தது. ஏற்கனவே அவரது இந்த முடிவு குறித்து பேசியிருந்த ரோகித் சர்மா : தான் எப்போது ஆஸ்திரேலியா செல்வேன் என்று முடிவு செய்யவில்லை என்றும் விரைவில் அது குறித்து அறிவிப்பேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
முடிவை மாற்றிய ரோஹித் சர்மா :
இதன் காரணமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என்றும் பும்ரா கேப்டனாக செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா பயணிக்காத இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இரண்டாவது குழந்தையின் வருகைக்காக காத்திருப்பதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அதன் காரணமாக ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி பெர்த் நகரில் நவம்பர் 22-ஆம் தேதி துவங்கும் முதல் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா தம்பதிக்கு நேற்று மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாயும் சேயும் நலம் என்பதனால் இரு குடும்பத்தினரும் தற்போது மகிழ்ச்சி உள்ளனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா குழந்தை பிறந்த மகிழ்ச்சியுடன் சேர்த்து ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்று தனது தேசிய கடமையை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி தனது இரண்டாவது குழந்தையின் வருகைக்காக காத்திருந்த ரோகித் சர்மா தற்போது மீண்டும் தந்தையாகியுள்ளதால் இன்னும் ஒரு வாரத்தில் துவங்க இருக்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக நாளை மறுதினம் ஆஸ்திரேலிய நாட்டிற்கு பயணிப்பார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 3 செஞ்சூரி நான்கு 50.. டி20 கிரிக்கெட்டில் எந்த வீரரும் செய்யாத மாபெரும் உலக சாதனை படைத்த சஞ்சு சாம்சன்
ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணிக்கு இந்த ஆஸ்திரேலிய தொடர் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்ட வேளையில் ரோகித் சர்மா பங்கேற்பாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இவ்வேளையில் முன்கூட்டியே குழந்தை பிறந்துள்ளதால் தற்போது அவர் ஆஸ்திரேலிய நாட்டிற்கு செல்லும் முடிவை கையில் எடுத்துள்ளார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.



