தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஜோகன்ஸ்பர்க் நகரில் நவம்பர் 15ஆம் தேதி நடைபெற்ற 4வது டி20 போட்டியில் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப் போட்டியில் முதலாவதாக விளையாடிய இந்தியா சஞ்சு சாம்சன் 109* ரன்களும் திலக் வர்மா 120* ரன்களும் குவித்த உதவியுடன் 283-1 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய தென்னாப்பிரிக்கா 18.2 ஓவரில் 148 ரன்களுக்கு சுருண்டு தோல்வியை சந்தித்தது.
அதிகபட்சமாக ட்ரிஸ்ஷன் ஸ்டப்ஸ் 43 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் 3 – 1 (4) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா சமீபத்திய நியூசிலாந்து தொடரில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்து ரசிகர்களுக்கு ஆறுதலை கொடுத்தது. இந்த வெற்றிக்கு அடுத்தடுத்த சதங்கள் அடித்து முக்கிய பங்காற்றிய திலக் வர்மா தொடர்நாயகன் விருதை வென்றார்.
சாம்சன் சாதனை:
அதே போல இத்தொடரின் முதல் போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் பின்னர் டக் அவுட்டானார். இருப்பினும் இந்த போட்டியில் சதமடித்த அவர் சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக ஹைதராபாத் நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் சதமடித்தார். அந்த வகையில் இந்த வருடம் சஞ்சு சாம்சன் மொத்தமாக மூன்று சதங்களை அடித்துள்ளார்.
இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் மூன்று சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை அவர் படைத்துள்ளார். அவரை தவிர்த்து உலகில் வேறு யாரும் ஒரே வருடத்தில் 3 சதங்கள் அடித்ததில்லை. இது போக விக்கெட் கீப்பராக அவர் 4 முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார்.
அசத்தும் சாம்சன்:
அதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். இதற்கு முன் இசான் கிசான் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தலா 3 முறை 50க்கும் ரன்கள் குவித்ததே முந்தைய சாதனை. அந்த வகையில் ஒருவழியாக சாம்சன் சிறப்பாக விளையாடுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: ஏகப்பட்ட சிந்தனை இருந்தது.. ஆனாலும் இதுதான் என் வேலை.. கடைசி போட்டியில் அடித்த சதம் குறித்து – சஞ்சு சாம்சன் பேச்சு
ஏனெனில் 2015இல் அறிமுகமான அவருக்கு 2021 வரை நிலையான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதே போல கிடைத்த வாய்ப்புகளிலும் சரியாக விளையாடாத அவர் சமீப காலங்களில் சுமாராக பேட்டிங் செய்ததால் விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் தற்போது ஒரு வழியாக சாம்சன் தம்முடைய திறமையை நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



