
ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 24ஆம் தேதி செயின்ட் லூசியா நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டியில் எப்படியாவது இந்தியாவை தோற்கடித்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற கட்டாயத்திற்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டுள்ளது. எனவே இந்தியாவை அடித்து நொறுக்க ஆஸ்திரேலியா வரும் என்று நம்பப்படுகிறது.
மறுபுறம் செமி ஃபைனல் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியானாலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு பதிலடியாக இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து வெளியேற்ற இந்தியா தயாராகியுள்ளது. இதற்கிடையே நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி இத்தொடரில் இதுவரை ஒரு அரை சதம் கூட அடிக்காமல் தடுமாற்றமான ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பின்னடைகாவே பார்க்கப்படுகிறது.
உத்தப்பா கோரிக்கை:
பொதுவாக 3வது இடத்தில் விளையாடக்கூடிய அவர் இந்த தொடரில் துவக்க வீரராக களமிறங்கி தடுமாறி வருகிறார். எனவே விராட் கோலி 3வது இடத்தில் விளையாட வேண்டும் என்று பலரும் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் இந்தியா தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருவதால் அவர் ஓப்பனிங்கிலேயே பேட்டிங் செய்து வருகிறார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்து விராட் கோலி அவுட்டாகி விடக்கூடாது என்று ராபின் உத்தப்பா கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் சுயநலவாதி என்று சொன்னாலும் பரவலாயில்லை ஆனால் விராட் கோலி 120 – 125 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி 65 – 70 ரன்கள் எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில் செமி ஃபைனலுக்கு முன் விராட் கோலி ஃபார்முக்கு வருவது அவசியம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“இந்த தொடரின் ஒட்டுமொத்த முன்னோக்கை பெறுவதற்கு விராட் கோலியிடம் ஒரு திடமான இன்னிங்ஸ் தேவைப்படுகிறது. எனக்கு அவர் 65 – 75* ரன்கள் எடுக்க வேண்டும். அதை அவர் 120 – 125 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தாலும் அதற்காக நான் கவலைப்பட மாட்டேன். ஏனெனில் அதனால் கிடைக்கும் தன்னம்பிக்கையால் அந்த மனிதனால் எதையும் செய்ய முடியும்”
இதையும் படிங்க: கோச் கம்பீர், ருதுராஜ், சூர்யாகுமார் கிடையாது.. ஜிம்பாப்வே தொடரில் இவர் தான் புதிய கேப்டன்.. வெளியான தகவல்
“என்னைப் பொறுத்த வரை அரையிறுதி செல்வதற்கு முன்பு அவர் ஒரு நல்ல இன்னிங்ஸ் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். ரோகித் சர்மா தன்னுடைய பேட்டிங்கில் தெளிவாக இருக்கிறார். இந்த அணிக்காக சேவை செய்வதற்கு இதே போல அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.