கடந்த 2024-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரினை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இதன்மூலம் கடந்த 2007-ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது. இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது .
அபிஷேக் சர்மாவுடன் இவர்தான் துவக்க வீரராக விளையாடனும் : ராபின் உத்தப்பா
அதை தொடர்ந்து நடப்பு சாம்பியனாக 2026 டி20 உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியானது இம்முறை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெறும் இந்த உலக கோப்பை தொடரையும் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாகவும் இருந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடருக்கான பலமான இந்திய அணியும் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அபிஷேக் சர்மா முதன்மை துவக்க வீரராக களமிறங்கும் வேளையில் அவருடன் இணைந்து சஞ்சு சாம்சனே துவக்க வீரராக விளையாடுவார் என ஏற்கனவே தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் தனது கருத்தினை தெரிவித்துவிட்டார். இப்படி அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் விளையாடுவது நிச்சயம் இந்திய அணிக்கு கோப்பையை கைப்பற்றி தரும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது.
இவ்வேளையில் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக விளையாடினால் நிச்சயம் இம்முறையும் கோப்பை நமக்குத் தான் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
என்னை பொறுத்தவரை இந்த டி20 உலக கோப்பை தொடரில் அபிஷேக் சர்மாவுடன் சஞ்சு சாம்சன் களமிறங்கும் போது நிச்சயம் இந்திய அணிக்கு அதிரடியான ஓபனிங் கிடைக்கும். அவர்கள் இருவருமே அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள். ஆசிய கோப்பை தொடரில் திலக் வர்மாவுடன் சேர்ந்து அழுத்தமான வேளையிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்தார்.
இதையும் படிங்க : நியூசிலாந்து ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம் – விவரம் இதோ
டி20 போட்டிகளை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் முக்கியமான வீரர். அவருடைய பேட்டிங் ஆர்டரை பொறுத்தவரை ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே அவர் களமிறங்க வேண்டும். அப்படி களமிறங்கினால் தான் அவரால் பெரிய தாக்கத்தை நமக்கு ஏற்படுத்தித் தரமுடியும் என ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.



