நியூஸிலாந்து தொடரில் அந்த இடத்துல எறக்குங்க, ரிஷப் பண்ட் தனியாள ஜெயிச்சு கொடுப்பாரு – ராபின் உத்தப்பா அதிரடி கோரிக்கை

Rishabh Pant Robin Uthappa
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி வெளியேறிய இந்தியாவின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் நாடு திரும்பியுள்ளனர். மறுபுறம் அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் அணியை உருவாக்க வேண்டும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் பக்கத்தில் இருக்கும் நியூசிலாந்துக்கு பயணித்துள்ள இந்தியா 3 போட்டியில் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கியுள்ளது. வெலிங்டன் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் 2வது போட்டி நவம்பர் 20ஆம் தேதியன்று நடைபெறுகிறது.

Pandya-and-Williamson

- Advertisement -

இந்த தொடரில் ரோஹித் சர்மா, ராகுல், விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாததால் அவர்களது இடத்தில் விளையாடப் போவது யார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி தோல்விக்கு காரணமாக அமைந்த ராகுல் – ரோஹித் ஆகியோருக்கு பதில் டி20 கிரிக்கெட்டில் புதிய அதிரடி ஓப்பனிங் ஜோடியை உருவாக்கும் எண்ணத்தைக் கொண்டுள்ள இந்திய அணி நிர்வாகம் அந்த இடத்தில் யாருக்கு வாய்ப்பளிக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஓப்பனராக பண்ட்:

அதில் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் தொடர்களில் அசத்தலாக செயல்பட்டு நல்ல பார்மில் இருக்கும் சுப்மன் கில் முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இத்தொடரில் அறிமுகமாக ஓப்பனிங் இடத்தில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் சமீபத்திய தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் அசத்திய இஷான் கிசான் இடது கை ஓப்பனிங் ஜோடியாக களமிறங்குவார் என்று நம்பப்படுகிறது. ஆனால் இந்த நியூசிலாந்து தொடரில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்கினால் தனி ஒருவனாக வெற்றிகளை பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு அதிரடியாக செயல்படுவார் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.

Rishabh Pant 44

கடந்த 2017இல் அறிமுகமான அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தினாலும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை விளையாடிய 64 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்பில் ஒருமுறை கூட ரசிகர்களின் மனதில் நிற்கும் அளவுக்கு எப்போதுமே சிறப்பாக செயல்பட்டதில்லை. இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே அதிரடியாக விளையாடி தோனியை மிஞ்சும் அளவுக்கு வெளிநாடுகளில் சதங்களை அடித்துள்ள அவர் டி20 கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் களமிறங்குவதை விட ஓப்பனிங் பேட்ஸ்மேனாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட முடியும் என்று வாசிம் ஜாபர் போன்ற சில முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அந்த வரிசையில் இணைந்துள்ள உத்தப்பா இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நியூசிலாந்து தொடரில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்க வேண்டும். அவர் நிச்சயமாக டாப் ஆர்டரில் விளையாட வேண்டும். என்னைப் பொறுத்த வரை டி20 கிரிக்கெட்டில் அது தான் அவருக்கு சரியான இடம் என்று நினைக்கிறேன். எனவே இந்த தொடரிலிருந்து வரும் காலங்களிலும் ஓப்பனிங் இடத்தில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும். ஏனெனில் அவர் மேட்ச் வின்னர் போட்டியை தலைகீழாக மாற்றும் திறமை கொண்டவர். அவரிடம் இருக்கும் பேட்டிங் திறமைக்கு இந்தியாவுக்காக தனி ஒருவனாக வெற்றிகளை பெற்றுக் கொடுக்க முடியும். என்னைக் கேட்டால் அடுத்த 10 வருடத்தில் இந்திய டி20 கிரிக்கெட்டில் அவர் மிகப்பெரிய வீரராக வருவார் என்று சொல்வேன்” என கூறினார்.

Robin-Uthappa

இருப்பினும் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்த முயற்சியை ஏற்கனவே செய்து பார்த்த ரோஹித் சர்மா ரிசப் பண்ட்டுக்கு தம்முடன் தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பை கொடுத்தார். ஆனால் அதில் 26, 1 என சொற்ப ரன்களில் அவுட்டாகி கேப்டன் வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக ரிசப் பண்ட் செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement