அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியானது அங்கு நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்தது. இந்த தொடரில் இந்திய அணி அடைந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணியின் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்திய அணி தோல்வியை சந்திக்க இதுவே காரணம் :
மேலும் இந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இந்திய அணியானது அடுத்து நடைபெற்ற நான்கு போட்டிகளில் மூன்று தோல்விகளை சந்தித்ததற்கு மிக முக்கியமான காரணமாக இந்திய அணியின் மோசமான பேட்டிங்கே காரணமாக பார்க்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக அனுபவ வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தொடரில் ரன்களை குவிக்க தடுமாறி இருந்தனர். இந்நிலையில் இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் சத்தீஸ்வர் புஜாராவை தேர்வு செய்து அனுப்பாமல் விட்டது இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது என இந்திய அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அனுபவ வீரரான புஜாராவை தேர்வு செய்து அழைத்து செல்லாதது மிகப்பெரிய தவறாக மாறியுள்ளது. அப்படி ஒருவேளை புஜாராவை நீங்கள் தேர்வு செய்யாத போது அவருக்கு இணையாக விளையாடும் ஹனுமா விஹாரியை கூட தேர்வு செய்திருக்கலாம். அவரால் புஜாராவின் இடத்தை பூர்த்தி செய்து விளையாடிருக்க முடியும்.
ஆனால் அது போன்ற ஒரு வீரரையும் இந்திய அணி இந்த தொடரில் தேர்வு செய்யவில்லை. ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடக்கூடிய அனுபவ வீரர்கள் இந்திய அணிக்கு அவசியம் தேவைப்படுவர். ஆனால் அவரைப் போன்ற ஒரு வீரரை அணியில் தேர்வு செய்யாதது இந்திய அணி செய்த முட்டாள்தனம் என ராபின் உத்தப்பா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க : என்ன இருந்தாலும் செலக்டர்ஸ் பாண்டியாவை இப்படி அவமானப்படுத்தி இருக்கக்கூடாது – ஆகாஷ் சோப்ரா விளாசல்
நடைபெற்று முடிந்த இந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மீட்டிங்கில் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் புஜாராவை தேர்வுசெய்ய விரும்பியதாகவும், ஆனால் தேர்வுக்குழுவினர் தான் புஜாராவை தேர்வுசெய்ய மறுத்துவிட்டதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.