இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் சமீபத்தில் வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் இந்தியாவுக்கு அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு தொடரில் ஒயிட் வாஸ் தோல்வியையும் நியூசிலாந்து பரிசாக கொடுத்தது. அந்தளவுக்கு அத்தொடரில் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடி சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வியது.
முன்னதாக அந்த தொடரில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா சதமடித்து இந்தியாவை தோற்கடித்தார். அப்போது இந்தியாவை வீழ்த்துவதற்காக சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் உதவியுடன் சென்னையில் ஸ்பெஷல் பயிற்சிகளை எடுத்ததாக அவர் கூறினார். அந்த வகையில் இந்தியாவை வீழ்த்துவதற்கு சிஎஸ்கே நிர்வாகம் உதவியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
தோல்விக்கு காரணமான சிஎஸ்கே:
மறுபுறம் ஐபிஎல் தொடரில் தங்களுக்கு விளையாடும் வீரருக்கு பயிற்சி எடுக்கும் தேவையான வசதிகளை சிஎஸ்கே நிர்வாகம் செய்து கொடுத்தது. கடைசியில் அதுவே மறைமுகமாக இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது என்றே சொல்லலாம். இந்நிலையில் இனிமேலாவது இது போன்ற வேலையை சிஎஸ்கே மற்றும் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கேட்டுக் கொண்டுள்ளார்.
அதாவது இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் விளையாடும் வெளிநாட்டு வீரர்களுக்கு ஐபிஎல் நிர்வாகங்கள் உதவி செய்யக்கூடாது என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரச்சின் ரவீந்திரா சிஎஸ்கே அகாடமியில் பயிற்சிகளை எடுத்தார். சிஎஸ்கே நிர்வாகம் எப்போதும் தங்களுடைய வீரர்களுக்கு உதவக்கூடிய அற்புதமான அணியாகும்”
உத்தப்பா விமர்சனம்:
“ஆனால் எப்போதும் நீங்கள் உங்களுடைய ஐபிஎல் அணியை விட நாட்டுக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக வெளிநாட்டு வீரர்கள் விளையாட வரும் போது நீங்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். சிஎஸ்கே நிர்வாகம் எப்போதும் தங்களுடைய வீரர்கள் மீது கரிசனமும் உதவியும் செய்வது எனக்கு ஆச்சரியத்தை கொடுக்கவில்லை”
இதையும் படிங்க: 2 – 0ன்னு தோத்த நியூஸிலாந்து மாதிரி.. ஓவர்நைட்டில் மோசமாகாத இந்தியாவும் கம்பேக் கொடுக்கும்.. டாம் லாதம்
“நானும் சிஎஸ்கே அணியை விரும்புபவன். ஒருவேளை நான் இப்படி சொல்வது சரியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் நாட்டுக்காக என்று வரும் போது அந்தக் கோட்டை நாம் தாண்டாத வகையில் எங்காவது ஒரு கோடு இருக்க வேண்டும்! என்று கூறினார். அதே சமயம் ரச்சின் ரவீந்திரா பெங்களூருவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை தோற்கடித்ததாகவும் உத்தப்பா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.