இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் 2026 ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் முடிவடைந்து தற்போது இந்த தொடருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி சார்பாக மகேந்திர சிங் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது.
தோனிக்கு இதுதான் கடைசி ஐ.பி.எல் தொடர் : ராபின் உத்தப்பா
கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை அணிக்காக கேப்டனாக அறிமுகமான அவர் இடையில் இரண்டு சீசன்கள் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக விளையாடி இருந்தாலும் பின்னர் மீண்டும் சி.எஸ்.கே அணியில் இணைந்து முக்கிய நட்சத்திர வீரராக விளையாடி வருகிறார். இத்தனை ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற போதும் அந்த அணியின் கேப்டனாக தலைமை தாங்கி வழிநடத்தி உள்ளார்.
சி.எஸ்.கே அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த அவர் எப்போது ஓய்வு பெறுவார்? என்கிற கேள்வி கடந்த சில சீசன்களாகவே பலரது மத்தியிலும் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது 44 வயதான மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டுடன் நிச்சயம் ஓய்வை அறிவித்து விடுவார் என்று சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : சி.எஸ்.கே அணியில் தோனியின் கடைசி சீசன் இதுதான் என்பது உறுதியாகிவிட்டது. இந்த விடயத்தில் மேலும் நீட்டிப்பிற்கு வாய்ப்பே இல்லை. என்னை பொறுத்தவரை அனைத்து கணக்குகளும் உறுதியாக கூறுகின்றன. மேலும் ஒரு ஆண்டு நிச்சயம் விளையாட மாட்டார். அவருடைய பயணம் இந்த ஆண்டுடன் நிறைவுக்கு வர இருக்கிறது.
அதற்கான அறிகுறிகளும் நமக்கு தெளிவாக அவரது ஓய்வை தெரிவிக்கின்றன. ஏனெனில் இந்த ஆண்டு இளம் வீரர்களை நம்பி சி.எஸ்.கே அணியின் நிர்வாகம் அதிகளவு இன்வெஸ்ட்மென்ட் செய்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை கணக்கில் கொண்டே இளம் வீரர்களை அதிகளவு அணிக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம் அடுத்தகட்ட நகர்வை தீர்மானித்து விட்டார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க : விராட் கோலியுடன் இவரை ஒப்பிடுவது தவறே இல்ல.. அந்த அளவுக்கு இவர் செம டேலண்ட் – இர்பான் பதான் பாராட்டு
இதனால் இந்த ஆண்டுடன் தோனி ஓய்வு பெற்று இனி வரப்போகும் ஆண்டுகளில் இளம் வீரர்களைக் கொண்ட சி.எஸ்.கே அணிக்கு உறுதுணையாக வெளியில் இருந்து உதவி செய்வார் என்று நினைக்கிறேன். ருதுராஜ் கெய்க்வாட்டின் தலைமையில் இன்னொரு ரெய்னா, இன்னொரு ஜடேஜா என பல்வேறு அடுத்த தலைமுறை வீரர்களை அவர்கள் வளர்த்தெடுக்க தயாராகி விட்டார்கள் என்றும் ராபின் உத்தப்பா கூறியது குறிப்பிடத்தக்கது.



