இங்கிலாந்துக்கு எதிராக நிறைவு பெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 4 – 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதனால் தங்களுடைய சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை நிரூபித்த இந்தியா டி20 உலக சாம்பியனுக்கு அடையாளமாக செயல்பட்டது. முன்னதாக அந்தப் போட்டியில் புனே நகரில் நடைபெற்றப் போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய சிவம் துபே கடைசி ஓவரின் 5வது பந்தில் ஹெல்மெட்டில் அடி வாங்கினார்.
அப்போது அவரை சோதித்த இந்திய அணியின் மருத்துவர் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தார். அதன் காரணமாக தொடர்ந்து விளையாடிய துபே கடைசிப் பந்தில் ரன் அவுட்டானார். அடுத்ததாக இங்கிலாந்து பேட்டிங் செய்ய வந்த போது சப்ஸ்டிடியூட் விதிமுறையை பயன்படுத்திய இந்தியா அவருக்கு பதில் ஹர்ஷித் ராணாவை களம் இறக்கியது.
பீட்டர்சனுக்கு பதிலடி:
அந்த வாய்ப்பில் மூன்று விக்கெட்டுகள் எடுத்த அவர் 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றினார். ஆனால் ஐசிசி விதிமுறைப்படி பேட்ஸ்மேன் காயமடைந்தால் பேட்ஸ்மேன், பவுலர் காயத்தை சந்தித்தால் பவுலர் தான் விளையாட வேண்டும். எனவே ஆல் ரவுண்டர் துபேவுக்கு பதில் பவுலரான ராணாவை இந்தியா பயன்படுத்தியது ஏற்றுக்கொள்ள முடியாதது என ஜோஸ் பட்லர் கெவின் பீட்டர்சன் ஆகியோர் விமர்சித்தார்கள்.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் முதல் பந்திலேயே சிவம் துபே 55 (23) ரன்கள் விளாசி மிரட்டிய பிலிப் சால்ட்டை அவுட்டாக்கியதாக முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அந்த வகையில் தனது பவுலிங் திறமையை விமர்சித்த கெவின் வாயை துபே முதல் பந்திலேயே மூடிவிட்டதாகவும் உத்தப்பா கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
இந்தியா தவறு செய்யல:
“இது சர்ச்சைக்குரியது என்று நான் நினைக்கிறேன். துபே பவுலிங் செய்வதை பீட்டர்சன் பார்க்க விரும்பினார். ஆனால் துபே முதல் பந்திலேயே விக்கெட்டை எடுத்து அவரது வாயை மூடினார். ஆனாலும் அது சர்ச்சைக்குரியதாக இருந்தது. விதிமுறைகளை பற்றி தெளிவு இருக்க வேண்டும். அதை ஐசிசி தான் கவனித்துக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: 33 வயதில் திறமையால் இந்திய அணியின் கதவை உடைத்த வருண்.. உருவாகும் சாம்பியன்ஸ் வாய்ப்பு?
“சப்ஸ்டிடியூட் விதிமுறையில் இந்திய அணி எந்த ஓட்டையையும் பயன்படுத்தியதாக எனக்கு தெரியவில்லை. கண்டிப்பாக அந்த முடிவு போட்டி நடுவரின் அனுமதி பெற்றப் பின்பே எடுக்கப்பட்டிருக்கும். கடைசிப் போட்டியில் சிவம் துபேவும் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ராணாவை விட அவர் 20 – 25 மைல் வேகம் குறைவாக வீசலாம். ஆனால் அப்போதும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல பவுலர் மற்றும் ஆல் ரவுண்டர்” என்று கூறினார்.