இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4 – 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக மீண்டும் சொந்த மண்ணில் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. பிப்ரவரி 6ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடும் இந்திய அணி நாக்பூரில் பயிற்சிகளை துவங்கியுள்ளது.
இந்நிலையில் அந்தத் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இத்தனைக்கும் அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியதில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் 2021இல் அறிமுகமான அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் கழற்றி விடப்பட்டார்.
ஒருநாள் அணியின் தமிழன்:
இருப்பினும் மனம் தளராமல் தமிழ்நாடு மற்றும் டிஎன்பிஎல் அணிக்காக விளையாடி வந்த அவர் கடந்த வருடம் கொல்கத்தா கோப்பையை வெல்ல உதவினார். அதன் காரணமாக கௌதம் கம்பீர் பயிற்சியாளராக வந்ததும் வருண் சக்கரவர்த்தியை மீண்டும் இந்திய டி20 அணிக்குள் கொண்டு வந்தார். அந்த வாய்ப்பில் கடந்த வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து டி20 தொடர்களில் இந்தியா வெற்றி பெற வருண் முக்கிய பங்காற்றினார்.
குறிப்பாக கடந்த இங்கிலாந்து தொடரில் மட்டும் 14 விக்கெட்டுகள் எடுத்த அவர் வெற்றியில் முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார். இதற்கிடையே 2025 விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் கோப்பையிலும் 18 விக்கெட்டுகள் எடுத்த அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே அவரை 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்ந்தெடுக்காமல் போனால் இழப்பு இந்தியாவுக்கே என்று தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்றவர்கள் தெரிவித்தார்கள்.
சாம்பியன்ஸ் ட்ராபி வாய்ப்பு:
அதன் காரணமாக தற்போது இங்கிலாந்து ஒருநாள் தொடரில் வருண் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றே சொல்லலாம். ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளூரில் தமிழ்நாடுக்காக 23 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 59 விக்கெட்டுகளை 21.15 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அப்படியே தன்னுடைய திறமைகள் மற்றும் விடாமுயற்சியால் 33 வயதில் இந்திய ஒருநாள் அணியின் கதவை உடைத்துக் கொண்டு வருண் வந்துள்ளார் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: பெயர் ராகுல்ன்னா இளிச்சவாயா? 25/3ன்னு சரிந்த இந்தியாவை காப்பாற்றியதை மறக்காதீங்க.. ஆகாஷ் சோப்ரா
கௌதம் கம்பீர் பயிற்சியாளராக இருப்பதால் இங்கிலாந்து ஒருநாள் தொடரில் அவர் அறிமுகமாக விளையாட வாய்ப்புள்ளது. ஒருவேளை அந்த வாய்ப்பில் வருண் சக்கரவர்த்தி நன்றாக செயல்பட்டால் சாம்பியன்ஸ் டிராபி அணியில் தேர்வு செய்யப்பட 100% பிரகாச வாய்ப்பு உருவாகியுள்ளது. அது நடைபெற வேண்டும் என்பதே தமிழக ரசிகர்களின் விருப்பமாகும்.