
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மே 17ஆம் தேதி மீண்டும் துவங்கி நடைபெறுகிறது. முன்னதாக இந்த வருடம் ரஜத் படிதார் தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. அவரது தலைமையில் 8 வெற்றிகளைப் பெற்றுள்ள அந்த அணி 90% பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
முன்னதாக இந்த வருடம் சிஎஸ்கே அணியை அதனுடைய சொந்த ஊரான சேப்பாக்கத்தில் 17 வருடங்கள் கழித்து பெங்களூரு தோற்கடித்தது. அதனால் ஆர்பிசி ரசிகர்களுக்கு மமதை ஏற்பட்டதா என்னவோ தெரியவில்லை. அடுத்ததாக சிஎஸ்கே அணியை தங்களுடைய சொந்த ஊரில் இருக்கும் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி எதிர்கொண்டது. அந்தப் போட்டிக்கு முன்பாக சிஎஸ்கே அணி மற்றும் அதன் கேப்டன் தோனியை ஆர்சிபி ரசிகர்கள் கீழ்த்தரமாக கிண்டல் செய்தனர்.
குறிப்பாக 2016, 2017 ஆகிய வருடங்களில் சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் விளையாடத் தடை பெற்றது. அதைக் குறிக்கும் வகையில் கைதி போன்ற வெள்ளை ஆடையில் சிஎஸ்கே, தல தோனி என்று எழுதி ஆர்சிபி ரசிகர்கள் கிண்டல் செய்தனர். அத்துடன் தண்ணீர் பாட்டிலில் சிஎஸ்கே அணியை விராட் கோலி விடமாட்டார் என்று எழுதி ஆர்சிபி ரசிகர்கள் கிண்டலடித்தார்கள்.
கடைசியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் போட்டியின் முடிவில் மைதானத்திலும் மைதானத்திற்கு வெளியேயும் சிஎஸ்கே ரசிகர்களிடம் ஆர்சிபி ரசிகர்கள் அத்து மீறினார்கள். இந்நிலையில் இது போன்ற முறையற்ற கிண்டல்கள் தமக்கு கவலையளிப்பதாக ஆர்சிபி ரசிகர்களை முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா ஆர்சிபி ரசிகர்களை சாடியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“அந்த கிண்டல்கள் மிகவும் உக்கிரமாக இருந்தது. மைதானத்திற்கு வெளியே பேருந்து கிளம்பும் போது ஆர்சிபி ரசிகர்கள் சிஎஸ்கே வீரர்களை கேலி செய்தனர். ரசிகர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டது நான் பார்த்த மற்றொரு மோசமான விஷயம். இது போக பெண்களும் மோதிக் கொண்டனர். கடந்த வருடம் சென்னை மைதானத்தில் இவ்வாறு நடந்ததைப் பார்த்தோம்”
இதையும் படிங்க: மாபெரும் கெளரவம் வழங்கிய பிசிசிஐ .. 2007இல் ஒய்வு பெற நினைத்து 2011 உ.கோ வென்றது பற்றி சச்சின் நெகிழ்ச்சி
“இவை அனைத்தின் உச்சமாக வெள்ளை சட்டையில் கருப்புக்கோட்டை வரைந்து சிஎஸ்கே 2 வருடங்கள் தடை பெற்றதைக் கேலி செய்யும் வகையிலான ஜெர்ஸிகளை ஆர்சிபி ரசிகர்கள் தூக்கிக் காட்டினார்கள். அதில் தோனியின் நம்பர் 7, தல என்று எழுதிய அவர்கள் சிஎஸ்கே அணி 2 வருடங்கள் சிறைக்கு சென்றதாக கிண்டலடித்தனர். இந்த அனைத்தும் விளையாட்டை தாண்டிச் செல்வது எனக்கு கவலையைக் கொடுக்கிறது. ஏனெனில் நாளின் இறுதியில் இது வெறும் விளையாட்டு மட்டுமே” என்று பேசினார்.