இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் செட்டேஸ்வர் புஜாரா சமீபத்தில் அனைத்து விதமான போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2010 – 2023 வரையிலான காலகட்டங்களில் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 7195 ரன்கள் அடித்து இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இந்தியா வென்ற 2 டெஸ்ட் தொடர்களில் அவர் முக்கிய பங்காற்றினார்.
அதன் பின் தடுமாற்றமாக விளையாடி வந்த அவர் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அப்போது இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் சிறப்பாக விளையாடி கம்பேக் கொடுத்த புஜாரா தம்முடைய 100வது சாதனைப் போட்டியில் விளையாடினார். இருப்பினும் முன்பு போல் பெரிய ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறிய அவர் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுடன் மொத்தமாக கழற்றி விடப்பட்டார்.
ரொம்ப லேட்டான ஓய்வு:
அதிலிருந்து மீண்டும் கம்பேக் கொடுப்பதற்காக கவுன்டி மற்றும் உள்ளூர் தொடரில் விளையாடிய புஜாராவை தேர்வுக்குழு கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக கடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடர்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் இனிமேலும் வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்த புஜாரா ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் கடந்த 2024-25 ஆஸ்திரேலியா தொடரில் வாய்ப்பு கிடைக்காத போதே புஜாரா ஓய்வு பெற்றிருக்க வேண்டுமென முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அந்த வகையில் மிகவும் தாமதமாக ஓய்வு பெற்ற புஜாராவின் முதல் சந்திப்பு பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “புஜாரா தனது இருத்தலை கொஞ்சம் நீட்டித்தார் என்று நினைக்கிறேன்”
உத்தப்பா கருத்து:
“கடந்த இங்கிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காததால் இனிமேலும் நமக்கு இடம் கிடைக்காது என்பதை அவர் புரிந்திருக்கலாம். புதிய 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையில் ரஹானே மற்றும் அவர் மீண்டும் இந்திய அணியில் சென்று விளையாடுவதற்கான வாய்ப்பு இருண்டுள்ளதாக தெரிகிறது. என்னைக் கேட்டால் ஆஸ்திரேலியாவில் தேர்ந்தெடுக்காத போதே அவர் தன்னுடைய ஓய்வை அறிவித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: 38 ரன்ஸ்.. 3 விக்கெட்ஸ்.. சௌத்தீயை முந்திய ரசித் கான் உலக சாதனை.. அமீரகத்தை சாய்த்த ஆப்கானிஸ்தான்
“ஆனால் எப்போது ஓய்வு பெற்றாலும் அது கடினமான முடிவாகவே இருக்கும். 2009 – 10 சீசனில் கர்நாடகா சௌராஷ்ட்ரா அணிகள் மோதிய போட்டியில் புஜாரா முச்சதம் அடித்தது எனக்கு நினைவிருக்கிறது. நாளின் இறுதியில் 200 ரன்கள் எடுத்த அவர் அடுத்த நாள் காலை 7.30 மணிக்கே மீண்டும் பேட்டிங் செய்ய தயாராகி விட்டார். புஜாராவை பொறுத்த வரை நாட் அவுட்டாக செல்வதில் பற்று கொண்டிருந்தார்” எனக் கூறினார்.



