கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. அதனால் 15 வருடங்கள் கழித்து தெனாப்பிரிக்காவிடம் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியைத் தழுவியது. அந்தத் தோல்விக்கு கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த சுழலுக்கு சாதகமான ஆடுகளம் முக்கிய காரணமாக அமைந்தது.
இத்தனைக்கும் கடந்த நியூசிலாந்து தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்தது. அந்தத் தோல்விக்கும் சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த ஆடுகளங்களே முக்கிய காரணமானது. அந்தப் படுதோல்வியே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாமல் இந்தியா வெளியேறுவதற்கும் வித்திட்டது.
இப்படியே போனால் 2027 ஃபைனல் போறது கஷ்டம்:
இருப்பினும் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி கொல்கத்தாவில் மீண்டும் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்து அவமான தோல்வியைத் சந்தித்துள்ளது. ஏனெனில் தாங்கள் தான் கொல்கத்தாவில் அப்படிப்பட்ட ஆடுகளம் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வழக்கம் போல இங்கிலாந்தில் நடைபெற உள்ளது.
அங்கே இந்தியாவை வெற்றி பெற வைப்பதற்குத் தேவையான 3வது வேகப்பந்து வீச்சாளர் இல்லையென்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கவலைத் தெரிவித்துள்ளார். அத்துடன் சொந்த மண்ணிலேயே தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணி இப்படியே சென்றால் 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெற முடியாது என்றும் அவர் கவலைத் தெரிவித்துள்ளார். இது பற்றி உத்தப்பா பேசியது பின்வருமாறு.
உத்தப்பா கவலை:
“வெளிநாட்டு அணிகள் இந்தியாவில் மிகவும் குறைவான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் அதிக நேரத்தை செலவிட்டு தயாராகிறார்கள். இந்தியாவில் அதிகப்படியான கிரிக்கெட் நடக்கிறது. நீங்கள் ஒரே அளவை அனைத்து இடத்திலும் பொருத்தி வெற்றியைப் பெற முயற்சிக்கிறீர்கள். ஆனால் உண்மையில் நீங்கள் அடுத்த 2 வருடங்களில் எட்டப்போகும் இலக்கு பற்றிய யதார்த்த நிலையை புரிந்து கொள்வது அவசியம்”
இதையும் படிங்க: 100வது டெஸ்டில் தனித்துவ உலக சாதனையை சமன் செய்த ரஹீம்.. வங்கதேச ப்ராட்மேனை கொண்டாடும் ரசிகர்கள்
“ஆம் நீங்கள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்ல விரும்புகிறீர்கள். ஆனால் அதற்கு முதலில் இந்த அணி தயாராக இருக்கிறதா? பும்ரா, சிராஜ் ஆகியோரைத் தவிர்த்து யார் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்? அவர்களை தவிர்த்து நம்மிடம் தரமான 3வது வேகப்பந்து வீச்சாளர் இல்லை. நம்முடைய அணி நிர்வாகம் நிறைய இளம் வீரர்களை முயற்சிக்கிறது. ஆனால் நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் இதுவரை நம்மிடம் உறுதிப்படுத்தப்பட்ட 3வது வேகப்பந்து வீச்சாளர் இல்லை” என்று கூறினார்.



