ஐபிஎல் தொடரின் 26 வது லீக் போட்டி நேற்று முதல் போட்டியாக துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற வார்னர் முதலில் பேட் செய்வதாக அறிவித்தார்.
அதன்படி முதலில் விளையாடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 54 ரன்கள், வார்னர் 48 ரன்களும் குவித்தனர். அதனை தொடர்ந்து தற்போது 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக ராகுல் திவாதியா 28 பந்துகளில் 45 ரன்களும், ரியான் பராக் 26 பந்துகளில் 42 ரன்களும் குவித்தனர். ஆட்டநாயகனாக ராகுல் திவாதியா தேர்வானார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட போது ரியான் பராக் சிக்ஸ் அடித்து போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார்.
தான் வெற்றி காண ரன்னை அடித்ததும் மிகவும் சந்தோஷத்தில் இருந்த அவர் அசாம் ஸ்டைலில் பிகு ஸ்டைல் டான்ஸ் ஆடினார். அசாமில் இளைஞர்கள் தாங்கள் வெற்றி பெற்றால் அதே போன்று டேன்ஸ் ஆடி வெற்றியைக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் அந்த டான்ஸ் ஆடி ரியான் பராக் தனது அணியின் வெற்றியை கொண்டாடினார். இதனை கண்ட டேவிட் வார்னர் அவர் மீது சற்று கோபத்துடன் அம்பயரை நோக்கி ஏதோ பேசினார்.
ஆனால் அம்பயர் உடனடியாக அவரை சமாதானப்படுத்த அதன் பின்பு கலீல் மற்றும் திவாதியா ஆகியோரது வாய்த் தகராறு முற்றியது. அதன் பின்னர் அம்பயர் மற்றும் கேப்டன் வார்னர் ஆகியோர் சேர்ந்து அவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தது வேறு கதை.