IND vs AUS : அவர் மட்டும் இருந்திருந்தா இந்தியாவுக்கு இந்த பரிதாப நிலை வந்திருக்காது – டேனிஷ் கனேரியா ஆதங்கம்

Kaneria
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டியில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இருப்பதால் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆனால் வரும் ஜூன் மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற இன்னும் ஒரு வெற்றி தேவைப்படும் நிலையில் மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் தாறுமாறாக சுழன்ற பிட்ச்சை கச்சிதமாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் மேத்தியூ குனேமான் 6 விக்கெட்டுகளையும் நேதன் லயன் 11 விக்கெட்களையும் சாய்த்து இந்தியாவுக்கு தோல்வியை பரிசளித்தனர்.

அதை பார்க்கும் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்த சமயத்தில் இந்த தொடரில் ரிஷப் பண்ட் இல்லாமல் போய்விட்டாரே என்று ஆதங்கத்தையும் வேதனையையும் சோகத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். ஏனெனில் 2017ஆம் ஆண்டு அறிமுகமான அவர் என்ன தான் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய சவாலான வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக தோனியால் முடியாத சாதனையை அசால்டாக படைத்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.

- Advertisement -

கனேரியா ஆதங்கம்:
குறிப்பாக 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா தொடரை வென்று சரித்திரம் படைக்க முக்கிய பங்காற்றிய அவர் காபாவில் 89* ரன்கள் குவித்து வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்ததை யாராலும் மறக்க முடியாது. அதை விட பொதுவாகவே ஸ்பின்னர்களுக்கு எதிராக அதிக ரன்களை குவித்து சிறந்த புள்ளிவிவரத்தை வைத்துள்ள ரிஷப் பண்ட் இதே நேதன் லயனை அவர்களது சொந்த ஊரான ஆஸ்திரேலிய மண்ணிலேயே இறங்கி இறங்கி சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்க விட்டு சரமாரியாக அடித்து நொறுக்கியதையும் யாராலும் மறக்க முடியாது.

அப்படிப்பட்ட தரமான அவர் தற்போது கார் விபத்துக்குள்ளாகி குணமடைந்து வருவதால் இந்தியாவுக்காக விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர் இல்லாதது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது போலவே நடைபெற்று வருகிறது. ஆனால் அவரது இடத்தில் வாய்ப்பு பெற்ற கேஎஸ் பரத் 90களில் இருந்த விக்கெட் கீப்பர்களைப் போல் பந்து பிடிக்கும் வேலையில் அசத்துகிறாரே தவிர பேட்டிங்கில் இதுவரை 30 ரன்கள் கூட தாண்டவில்லை. அதனால் ரிஷப் பண்ட் சீக்கிரம் குணமடைந்து டெஸ்ட் அணிக்கு வர வேண்டும் என்பதே மொத்த இந்திய ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் இத்தொடரில் மட்டும் ரிசப் பண்ட் விளையாடியிருந்தால் நேதன் லயன், குனேமான், டோட் முர்பி போன்ற ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களை குறைந்தது ஒரு இன்னிங்ஸ்சிலாவது அடித்து நொறுக்கியிருப்பார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் டேனிஷ் கனேரியாவும் இந்திய ரசிகர்களைப் போலவே ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

“இந்த ஸ்பின்னர்களுக்கு எதிராக எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்று நீங்கள் ரிஷப் பண்ட்டிடம் கேட்டால் அவர் உங்களிடம் கால்களை எப்படி நகர்த்தி பிட்ச்சில் இறங்கி வந்து பந்தை வெகு தூரத்திற்கு அடிக்க வேண்டும் என்பதை சொல்வார். அவர் மட்டும் இந்த சமயத்தில் இருந்திருந்தால் நேதன் லயன் – மேத்தியூ குனேமான் ஆகியோரை விட்டு வைத்திருக்க மாட்டார். அவர் அவர்களை அட்டாக் செய்து அவர்களுடைய லென்த்தை மாற்ற வைத்திருப்பார். ஆனால் அதை செய்யாத இந்திய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்துள்ளனர்”

இதையும் படிங்க:IND vs AUS : அற்புதமான கேட்ச், அபாரமான கேப்டன்ஷிப் – இந்தியாவை அதன் சொந்த மண்ணில் சாய்த்த ஸ்டீவ் ஸ்மித் – 2 சாதனை

“முதல் இன்னிங்ஸில் இந்தியா 250 – 300 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் விக்கெட்டுகள் விழுந்த போது அதிரடியாக விளையாட முயற்சித்த அவர்களது ஆட்டத்தால் தற்போது ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது” என்று கூறினார். அவர் கூறுவது போல இந்திய அணியின் நிலைமையை பார்த்து ரிஷப் பண்ட் கொடுக்கக்கூடிய ரியாக்சன்களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்துடன் பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement