
இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தனது முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக தாறுமாறாக சுழன்ற பிட்ச்சில் அதிரடியாக பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் வேறு ஏதோ ஒரு மைதானத்தில் விளையாடுவது போல அதிரடியாக ரன்களை குவித்து 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 92 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.
அதிரடி காட்டிய இந்தியா:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை இந்த தொடரின் முதல் போட்டியை விட படு மோசமான பேட்டியை வெளிப்படுத்தி வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிக பட்சமாக அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
இதனால் 143 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியாவிற்கு கேப்டன் ரோகித் சர்மா 46 ரன்கள் எடுக்க நடுவரிசையில் களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடியாக பேட்டிங் செய்து வெறும் 31 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அவருடன் ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்கள் எடுக்க 303/9 ரன்கள் எடுத்திருந்த போது இந்தியா தனது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து 447 என்ற இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு கேப்டன் மற்றும் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே மட்டும் தனி ஒருவனாக பேட்டிங் செய்து 15 பவுண்டரிகள் உட்பட சதமடித்து 107 ரன்கள் குவித்து அந்த அணியின் தோல்வியை தவிர்க்க போராடினார். இருப்பினும் இதர வீரர்கள் இந்தியாவின் துல்லியமான பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் அந்த அணி 208 ரன்களுக்கு மீண்டும் ஆல் அவுட் ஆனது. இதனால் 238 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற இந்தியா 2 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது.
மிரட்டல் பண்ட்:
முன்னதாக இந்த போட்டியில் வெறும் 28 பந்துகளில் அரை சதம் அடித்த ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் கபில்தேவ் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் கடந்த 1982ஆம் ஆண்டு கராச்சி நகரில் பாகிஸ்தானுக்கு எதிராக ஜாம்பவான் கபில் தேவ் 30 பந்துகளில் அரை சதம் அடித்ததே இதுநாள் வரை சாதனையாக இருந்தது. இது மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிகமாக அரைசதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற முன்னாள் ஜாம்பவான் எம்எஸ் தோனியின் சாதனையையும் அவர் உடைத்தார். இதற்கு முன் 34 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படுத்திருந்த எம்எஸ் தோனி தற்போது ரிஷப் பண்ட் முந்தியுள்ளார்.
இப்படி கபில் தேவ், எம்எஸ் தோனி என ஜாம்பவான் படைத்த சாதனைகளை ஒரே போட்டியில் அசால்டாக உடைத்த ரிஷப் பண்ட் வருங்காலத்தில் இந்தியாவின் மிகச் சிறந்த விக்கெட் கீப்பராக உருவெடுப்பார் என முன்னாள் இந்திய ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கூறியுள்ளார்.
இதுபற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் வரும் 24 வயது நிரம்பிய இளம் பையன். இருப்பினும் அவரின் கிரிக்கெட்டில் நிறைய முன்னேற்றங்களை பார்த்துள்ளோம். அவர் இன்னும் குறைந்தது அடுத்த 10 வருடங்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார் என்பதால் அவருடைய கிரிக்கெட் பயணம் இன்னும் வெகு தூரம் உள்ளது. அவர் தனது கிரிக்கெட் கேரியரை முடிக்கும்போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையுடன் விடை பெறுவார் என நம்புகிறேன்” என கூறினார்.
தோனியை மிஞ்சும் ரிஷப் பண்ட்:
அவர் கூறுவது போல தற்போது வெறும் 24 வயது மட்டுமே நிரம்பியுள்ள ரிஷப் பண்ட் இதுவரை பங்கேற்ற 30 டெஸ்ட் போட்டிகளில் 1920 ரன்களை எடுத்து 4-வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் ஜாம்பவான் எம்எஸ் தோனி 90 போட்டிகளில் 4876 ரன்களுடன் உள்ளார். எனவே அடுத்த 10 வருடங்களுக்கு அவர் விளையாடினால் நிச்சயமாக தோனியை முந்தி 8,000 – 10,000 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த இந்திய விக்கெட் கீப்பராக சாதனை படைக்க பிரகாசமான வாய்ப்புள்ளது.
சொல்லப்போனால் தனது அபார திறமையால் இப்போதே எம்எஸ் தோனியை மிஞ்சும் அளவுக்கு ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக மிகவும் சவால் நிறைந்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் கூட படைக்க முடியாத சரித்திர சாதனையை அவர் ஏற்கனவே படைத்துள்ளார்.
இதையும் படிங்க : கங்குலியிடம் நேரில் பேசி அந்த தொடரை நடத்தி காட்டுவேன். ரசிகர்களுக்கு நற்செய்தி – கலக்கும் ரமீஸ் ராசா
இருப்பினும் அவரை போல எத்தனை விக்கெட் கீப்பர்கள் வந்து பல ஆயிரம் ரன்கள் அடித்தாலும் இந்திய கிரிக்கெட்டில் என்றுமே எம்எஸ் தோனி ஒரு தலை சிறந்த விக்கெட் கீப்பராக போற்றப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.