இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ரிஷப் பண்ட் மீண்டும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு கம்பேக் கொடுத்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் நிரந்தர இடத்தை பிடிக்காவிட்டாலும் டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக தொடர்ந்து இடம்பெற்று வருகிறார்.
காயத்தில் இருந்து கம்பேக் கொடுப்பது ஈஸி கிடையாது : ரிஷப் பண்ட்
கடைசியாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருந்த அவர் அந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்த வேளையில் நான்காவது போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான கிரிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் காலில் காயமடைந்து அந்த போட்டியின் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
அதனால் ஐந்தாவது போட்டியை தவறவிட்ட அவர் காயத்திற்க்கான சிகிச்சையையும் மேற்கொண்டு இருந்தார். அப்படி அவருக்கு காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சொந்த மண்ணில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தவறவிட்ட அவர் தற்போது மீண்டும் முழு உடற்தகுதியை எட்டி அண்மையில் தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தார்.
மேலும் பெங்களூருக்கு சென்று தனது உடற்தகுதியையும் அவர் நிரூபித்துள்ளதால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெற்று நாளை நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறார். இந்நிலையில் தான் அடிக்கடி காயம் அடைவது குறித்தும் அதன் பின்னர் அதிலிருந்து மீண்டு வருவது குறித்தும் பேசியுள்ள ரிஷப் பண்ட் கூறுகையில் :
எப்பொழுதுமே காயத்திற்கு பிறகு மீண்டும் வருவது அவ்வளவு எளிதான ஒரு விடயம் கிடையாது. ஆனால் கடவுள் என் மீது நிறைய கருணை வைத்துள்ளார். அவர் கொடுக்கும் ஆசிர்வாதம் தான் நான் காயத்திலிருந்து மீண்டு வர காரணமாக இருக்கிறது. அதேபோன்று நான் எப்போதெல்லாம் களத்திற்கு வருகிறேனோ அப்போதெல்லாம் மேலே பார்த்து கடவுளுக்கும், எனது பெற்றோருக்கும், எனது குடும்பத்திற்கும், என்னை சுற்றியுள்ள நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிப்பேன்.
இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் வீரேந்திர சேவாக்கின் மாபெரும் சாதனையை தகர்த்து வரலாறு படைக்க காத்திருக்கும் – ரிஷப் பண்ட்
அவர்களது ஆசீர்வாதமும் என்னுடைய கம்பேக்கிற்கு ஒரு காரணமாக அமைகிறது. நான் களத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதை மட்டுமே நினைத்து விளையாடுகிறேன். காயம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது ஏனெனில் விளையாட்டு போட்டியில் காயம் ஏற்படுவது என்பது சகஜமான ஒன்று. நான் எப்போதெல்லாம் மைதானத்திற்கு திரும்புகிறானோ அப்போதெல்லாம் மகிழ்ச்சியுடன் என்னுடைய 100 சதவீத உழைப்பையும், பங்களிப்பையும் அணிக்காக வழங்குவதே கருத்தில் கொண்டு விளையாடுகிறேன்.



