
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று முள்ளான்பூர் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியானது 54 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியிடம் தோல்வியை தழுவியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் 7 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்களை குவிக்க பின்னர் 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டதாக நினைக்கிறோம். ஆனாலும் தேவையான இடங்களில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். இந்த போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்து இருந்தாலும் ஏகப்பட்ட பாசிட்டிவான விடயங்கள் நடந்துள்ளன. பேட்டிங்கில் இன்று எங்களால் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடிந்தது.
அதே வேளையில் இன்னும் அதிரடியாக விளையாடப்போகும் திட்டங்கள் குறித்தும் பேச வேண்டிய வேலை இருக்கிறது. பந்துவீச்சில் பவுலர்கள் சிறப்பாக வீசினாலும் அவர்களும் இன்னும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். இன்றைய போட்டியில் லக்னோ அணியின் துவக்க வீரராக ஆயுஷ் பதோனியை களமிறக்க எடுத்த முடிவு ஏற்கனவே நாங்கள் முடிவு செய்த ஒன்றுதான். அதாவது துவக்க வீரராக அவரை களமிறக்கி சுதந்திரமாக விளையாட வைக்க வேண்டும் என்று நினைத்தோம்.
இதையும் படிங்க : அவங்க 2 பேர் விளையாடுறதையும் பாத்து அசந்துட்டேன்.. லக்னோ அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – ஷ்ரேயாஸ் பேட்டி
அதேபோன்று அவர் துவக்க வீரராக விளையாடும் பட்சத்தில் மிடில் ஆடரிலும் அதிரடியாக நாங்கள் விளையாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். அதன் காரணமாகவே அவர் துவக்க வீரராக களமிறக்கப்பட்டார். இன்றைய போட்டியில் எங்களை விட பஞ்சாப் அணி மிகச் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளது. அவர்களுக்கு பாராட்டை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.