இங்கிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியானது விளையாடி வருகிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்தே இந்திய அணி சார்பாக நட்சத்திர இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமின்றி பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட் :
ஏற்கனவே லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்திய ரிஷப் பண்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 42 பந்துகளை சந்தித்த அவர் 1 பவுண்டரி, 1 சிக்சர் என 25 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனாலும் முக்கியமான இரண்டாவது இன்னிங்சில் அதிரடியான ஆட்டத்தை கையில் எடுத்த அவர் 58 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 65 ரன்கள் குவித்து அசத்தினார். இதன்மூலம் இந்த தொடரில் இதுவரை இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரராகவும் திகழ்கிறார்.
மேலும் எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் பல்வேறு சாதனைகளை தவிர்த்து வரும் வேளையில் தற்போது சேனா நாடுகளில் அதிக ரன்களை அடித்த ஆசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்த எம்.எஸ் தோனியையும் பின்னுக்கு தள்ளி மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் ரிஷப் பண்ட் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸின்போது அவர் 25 ரன்களை குவித்த வேளையில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கி சேனா நாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 2000 ரன்களை அடித்த வீரராக மாறினார். அதன்பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் 65 ரன்களில் ஆட்டமிழந்த போது அவர் தோனியின் சாதனையையும் முறியடித்து இருந்தார்.
இதையும் படிங்க : 250-300 கோடி எதுக்கு தராங்க? விமர்சனத்திற்கு உள்ளான சுப்மன் கில்லின் செய்கை – அப்படி என்ன செய்தார் தெரியுமா?
அதாவது இதுவரை 28 போட்டிகளில் சேனா நாடுகளில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 41 ரன்கள் சராசரியுடனும் 6 சதம் மற்றும் 6 அரைசதம் என 2023 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் சேனா நாடுகளில் அதிக ரன்களை அடித்த ஆசிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருந்த தோனியை பின்னுக்கு தள்ளி தற்போது ரிஷப் பண்ட் முதலிடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.