
இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அசத்தலான பேட்டிங் ஃபார்மில் ரன்களை குவித்து வருகிறார். அண்மையில் நடைபெற்று முடிந்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கையில் காயம் அடைந்து இருந்தாலும் வலியோடு விளையாடிய அவர் முதல் இன்னிங்ஸில் 74 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி முடிவடைந்த பிறகு 9 நாட்கள் கழித்து ஜூலை 23-ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி 2-2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்ய முடியும் என்பதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.
இந்நிலையில் அடுத்து நடைபெறயிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஒருவேளை ரிஷப் பண்ட் விளையாடினால் முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவின் மாபெரும் சாதனையை முறியடிக்கவும் ரிஷப் பண்டிற்கு வாய்ப்புள்ளது. அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் ரிஷப் பண்ட் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சி ஆரம்பித்ததில் இருந்து இந்திய அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரராக ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் மட்டும் ரோஹித் சர்மா இதுவரை 69 இன்னிங்ஸ்களில் விளையாடி 2716 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.
அவருக்கு அடுத்து 66 இன்னிங்ஸ்களில் விளையாடி 2677 ரன்களுடன் ரிஷப் பண்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார். அந்த வகையில் பார்க்கையில் : அடுத்த நான்காவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் மேலும் 40 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணிக்காக அதிக ரன்களை அடித்த வீரராக முதலிடத்திற்கு செல்வார்.
இதையும் படிங்க : முழுநேர பேட்ஸ்மேனாக ரிஷப் பண்டை விளையாட வைக்கக்கூடாது.. காரணத்தை கூறிய – ரவி சாஸ்திரி
இந்த பட்டியலில் ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு அடுத்து விராட் கோலி 79 இன்னிங்ஸ்களில் விளையாடி 2617 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், சுப்மன் கில் 65 இன்னிங்ஸ்களில் விளையாடி 2500 ரன்களுடன் நான்காவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 64 இன்னிங்ஸ்களில் விளையாடி 2212 ரன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.