நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தோல்வி அடைந்துள்ளது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் தொடங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 82, வில் எங் 71 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5, வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் விளையாடும் இந்தியா முதல் நாள் முடிவில் 86-4 ரன்கள் குவித்து தடுமாறி வருகிறது. கேப்டன் ரோஹித் 18, ஜெய்ஸ்வால் 30, விராட் கோலி 4 ரன்களில் அவுட்டானார்கள். களத்தில் கில் 31*, ரிஷப் பண்ட் 1* ரன்களுடன் உள்ளனர்.
ரிஷப் பண்ட் சொதப்பல்:
முன்னதாக இந்தப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் வீசிய 23வது ஓவரில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்சேல் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை அடித்து விட்டு ரன்கள் எடுக்க ஓடினார். அதை முகமது சிராஜ் சரியாக பிடித்து எடுத்து விக்கெட் கீப்பரிடம் போட்டார். அதை கவனித்த வில் எங் முதல் ரன்னை எடுத்ததும் 2வது ரன்னுக்கு ஓடலாமா வேண்டாமா என்று சில நொடிகள் யோசித்தார்.
மறுபுறம் டேரில் மிட்சேல் 2வது ரன்னை எடுப்பதற்காக ஓடி வந்தார். அதனால் மீண்டும் வில் எங் ஓடத் துவங்கியது போது சிராஜ் வீசிய பந்தை தாவி ரிஷப் பண்ட் பிடித்தார். அதற்குள் டேரில் மிட்சேல் இந்தப் பக்கம் ஓடி வந்து விட்டார். ஆனால் தாமதமாக ஓடத் துவங்கியதால் வில் எங் பிட்ச்சின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்தார். அதை கவனிக்காத ரிசப் பண்ட் பந்தை தனது அருகில் இருந்த ஸ்டம்ப் மீது அடிக்க முயற்சித்து தவற விட்டார்.
டிகே, ரோஹித் அதிருப்தி:
ஒருவேளை அதே பந்தை எதிர்ப்புறம் வீசியிருந்தால் அங்கே காத்துக் கொண்டிருந்த வாஷிங்டன் சுந்தர் அதைப் பிடித்து 34 ரன்களில் இருந்த வில் எங்கை அழகாக ரன் அவுட் செய்திருப்பார். ஆனால் ரிஷப் பண்ட் அதை செய்யாததால் தப்பிய வில் எங் மேற்கொண்டு 37 ரன்கள் குவித்தார். அந்த வகையில் வகையில் களத்தில் விழிப்புணர்வு இல்லாமல் செயல்பட்ட ரிஷப் பண்ட் நியூஸிலாந்துக்க்கு 37 ரன்களை இலவசமாக கொடுத்தார் என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: 78/1 டூ 86/4.. மீண்டும் சீட்டுக்கட்டாக சரியும் இந்தியா? சச்சினை மிஞ்சிய விராட் கோலி அபார சாதனை
இது பற்றி முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக். “விக்கெட் கீப்பர்கள் இது போன்ற ரன் அவுட் பற்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கண்டிப்பாக அங்கே ஒரு எளிதான ரன் அவுட் வாய்ப்பை ரிஷப் பண்ட் தவற விட்டுள்ளார்” என்ற நேரலையில் விமர்சித்தார். அதே போல கேப்டன் ரோஹித் சர்மாவும் எதிர்புறம் அடித்திருந்தால் விக்கெட் கிடைத்திருக்குமே என்று ரிஷப் பண்ட் அருகே சென்று சொல்லி அதிருப்தியை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.



