நியூசிலாந்துக்கு எதிராக இதுவரை விளையாடிய இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நியூசிலாந்து அணி வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. மறுபுறம் 12 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோல்வியை சந்தித்தது.
அந்த நிலையில் இத்தொடரின் மூன்றாவது போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து போராடி 235 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 82, வில் எங் 71 ரன்கள் எடுத்தனர்.
சரியும் இந்தியா:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, 5 வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 18 (18) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்து வந்த சுப்மன் கில்லுடன் சேர்ந்து ஜெய்ஸ்வால் 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 30 ரன்களில் அவுட்டானார்.
அவரை அவுட்டாக்கிய அஜாஸ் பட்டேல் அடுத்து வந்த முகமது சிராஜை கோல்டன் டக் அவுட்டாக்கினார். அதைத்தொடர்ந்து வந்த விராட் கோலி பவுண்டரியுடன் தன்னுடைய ஆட்டத்தை அற்புதமாக துவங்கினார். ஆனால் முதல் நாள் முடிவில் தேவையின்றி அவர் சிங்கிள் எடுக்கும் முயற்சித்து நான்கு ரன்களில் ரன் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.
டாப்பில் விராட் கோலி:
அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் இந்தியா 86-4 ரன்கள் எடுத்துள்ளது. சொல்லப்போனால் ஜெய்ஸ்வால் விளையாடியது வரை 78-1 என்ற நல்ல நிலையில் இருந்த இந்தியா 86-4 என 15 நிமிடங்களில் சரிந்தது. அதனால் கடந்த போட்டியை போல இந்த போட்டியிலும் இந்தியா சீட்டுக்கட்டு போல சரியுமா என்ற அச்சம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க:
களத்தில் கில் 31*, ரிஷப் பண்ட் 1* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக இன்று களமிறங்கிய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 600 இன்னிங்ஸ் விளையாடி முடித்துள்ளார். அந்த சர்வதேச கிரிக்கெட்டில் 600 இன்னிங்ஸ் முடிவில் அதிக ரன்கள் குவித்த வீரராக சச்சினையே மிஞ்சும் அளவுக்கு அவர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. விராட் கோலி: 27133*
2. சச்சின் டெண்டுல்கர்: 26060
3. ரிக்கி பாண்டிங்: 25386



