
கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் உடைத்தது. முன்னதாக அத்தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
அந்தப் போட்டியில் இந்தியா நிர்ணயித்த இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஹன்றிச் க்ளாஸென் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அதனால் கடைசி 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது முழங்காலில் லேசான காயத்தை சந்தித்ததாக சொன்ன ரிஷப் பண்ட் அதற்காக முதலுதவி எடுப்பதற்காக சில நிமிடங்கள் போட்டியை நிறுத்தினார்.
அதுவே தென்னாப்பிரிக்காவின் பக்கம் வேகமாக சென்று கொண்டிருந்த போட்டியை தங்கள் பக்கம் திருப்பியதாக சமீபத்தில் ரோஹித் சர்மா கூறியிருந்தார். ஏனெனில் அந்த தருணத்திற்கு பின் அடுத்த பந்திலேயே க்ளாஸென் அவுட்டானார். அப்படியே பும்ரா, அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் துல்லியமாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவை மடக்கிப் பிடித்தனர். இறுதியில் பாண்டியா வேகத்தில் டேவிட் மில்லர் கொடுத்த கேட்ச்சை சூரியகுமார் அபாரமாக பிடித்ததால் இந்தியா வென்றது.
அந்த வகையில் ரிஷப் பண்ட் சாதூரியமாக செய்த அறிவுப்பூர்வமான செயல் இந்தியாவின் வெற்றிக்கு உதவியதாக சமீபத்தில் ரோகித் சர்மா கூறியிருந்தார். இந்நிலையில் அது உண்மைதான் என்று தெரிவிக்கும் ரிஷப் பண்ட் இந்தியாவின் வெற்றிக்காக தாம் காயமடைந்தது போல் நடித்ததாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்”
“ஏனெனில் திடீரென போட்டியின் வேகம் மாறியது. 2 – 3 ஓவர்களில் நிறைய ரன்கள் அடிக்கப்பட்டது. எனவே உலகக்கோப்பை ஃபைனலில் அந்த வேகத்தை நாம் நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக உடல்பயிற்சியாளரை வரச் சொன்ன நான் ஏதாவது செய்து நேரத்தை வீணடியுங்கள் என்று சொன்னேன். அதைப் புரிந்து கொள்ளாத அவர் நான் உங்களுக்கு காயம் எதுவுமில்லையே? என்று கேட்டார்”
இதையும் படிங்க: என்னை வாங்குவாங்களா? மாட்டாங்களா? ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பிய ரிஷப் பண்ட் – என்ன நடந்தது?
“அப்போது அவரிடம் “நான் நடிக்கிறேன் பாய்” என்று சொன்னேன். இது போன்ற விஷயங்கள் அனைத்து நேரங்களிலும் வேலை செய்யாது. ஆனால் சில நேரங்களில் வேலை செய்யும். இன்றைய நாளில் அது வேலை செய்ததை விட நீங்கள் வேறு எதுவும் கேட்க முடியாது” என்று கூறினார். இதுபோக அந்த உலகக் கோப்பையில் 171 ரன்கள் அடித்து ரிசப் பண்ட் வெற்றியில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.