இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் அசத்தலான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார். அவரது இந்த அதிரடியான ஆட்டம் டெஸ்ட் போட்டிகளில் திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருவதால் இந்திய டெஸ்ட் அணியில் அவர் தவிர்க்க முடியாத வீரராகவும் மாறியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாறு படைக்கவுள்ள ரிஷப் பண்ட் :
ஆனால் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவின் பந்தினை பிடிக்கையில் இடது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்ட அவர் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளாமல் இரண்டு இன்னிங்ஸ்களிலும் கை வலியுடன் பேட்டிங் மட்டுமே செய்து இருந்தார்.
அதனால் எதிர்வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆனால் ஒருவேளை அவரது காயம் முழுவதுமாக குணமடைந்து நான்காவது போட்டியில் அவர் பங்கேற்கும் பட்சத்தில் இந்திய ஜாம்பவான்களை மிஞ்சி ஒரு மாபெரும் சாதனையை டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்த அற்புதமான ஒரு வாய்ப்பு காத்திருக்கிறது.
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக இந்த தொடரில் அற்புதமான பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் மிகச்சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறார். தற்போது 27 வயதான அவர் 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8 சதம் மற்றும் 17 அரைசதம் என 44 ரன்கள் சராசரியுடன் 3373 ரன்களை குவித்துள்ள வேளையில் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரராக ஒரு மாபெரும் சாதனைக்காக காத்திருக்கிறார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 88 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதன்மூலம் வீரேந்திர சேவாக்கிற்கு அடுத்து டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த இரண்டாவது இந்திய வீரராக ரோகித் சர்மாவுடன் சமநிலையில் உள்ளார். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் போது மேலும் அவர் மூன்று சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் வீரேந்திர சேவாக்கின் ஆல் டைம் சாதனையை முறியடித்து டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரராக பண்ட் முதலிடத்திற்கு செல்வார்.
இதையும் படிங்க : இன்னும் 3-4 வருஷத்துல கே.எல் ராகுல் இதை செய்வார்னு நம்புறேன்.. அவரோட ப்ரைம் பார்ம் இது – ரவி சாஸ்திரி பாராட்டு
இந்த பட்டியலின் தற்போதைய நிலையில் சேவாக் (90 சிக்ஸர்கள்), ரோகித் சர்மா (88 சிக்ஸர்கள்), ரிஷப் பண்ட் (88 சிக்ஸர்கள்) ஆகியோர் முதல் 3 இடங்களில் இருக்கின்றனர். இவர்கள் மூவருக்கு அடுத்து தோனி (78 சிக்ஸர்கள்) நான்காவது இடத்திலும், ரவீந்திர ஜடஜா (74 சிக்ஸர்கள்) ஐந்தாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் சிக்ஸ் அடிப்பதில் கைதேர்ந்தவராக இருப்பதினால் இந்த போட்டியிலேயே அவர் அந்த சாதனையை நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



