IND vs ENG : இறுதிப்போட்டியில் மிரட்டிய இந்திய அணி. தொடரை கைப்பற்றி அசத்தல் – வெற்றி பெற்றது எப்படி?

Rishabh Pant Hardik Pandya
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் அதைவிட அசத்தலான வெற்றி பெற்ற இங்கிலாந்து 1 – 1* (3) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அதனால் சமனடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3-வது போட்டி ஜூலை 17-ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு மான்செஸ்டரில் துவங்கியது.

அப்போட்டியில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் விலகிய நிலையில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு பும்ராவுக்கு பதிலாக இடம்பிடித்த முகமது சிராஜ் ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட் ஆகிய 2 முக்கிய பேட்ஸ்மேன்களை தனது முதல் ஓவரிலேயே டக் அவுட் செய்து அபார தொடக்கம் கொடுத்தார். அதனால் 12/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற இங்கிலாந்துக்கு மறுபுறம் அதிரடி காட்டிய மற்றொரு தொடக்க வீரர் ஜேசன் ராயை 41 (31) ரன்களில் காலி செய்த ஹர்திக் பாண்டியா மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்சை 27 (29) ரன்களில் அவுட் செய்தார்.

- Advertisement -

தடுமாறிய இந்தியா:
அதனால் 74/4 என மேலும் தடுமாறிய இங்கிலாந்தை மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த கேப்டன் ஜோஸ் பட்லர் – மொயின் அலி ஜோடி பொறுப்புடன் 5-வது விக்கெட்டுக்கு முக்கியமான 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு மீட்டெடுத்தபோது 34 (44) ரன்களில் மொயின் அலி ஆட்டமிழந்தார். இருப்பினும் அடுத்து களமிறங்கிய லியம் லிவிங்ஸ்டன் 27 (32) ரன்களில் பாண்டியாவின் பந்தில் ஆட்டமிக்க அதே ஓவரில் மறுபுறம் நிதானத்தை காட்டிக்கொண்டிருந்த கேப்டன் பட்லர் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 60 (80) ரன்கள் எடுத்திருந்த போது ஜடேஜாவின் அற்புதமான கேட்சால் அவுட்டானார்.

அதனால் 199/7 என சறுக்கிய இங்கிலாந்தை கடைசியில் டேவிட் வில்லி 18 (15) ரன்களும் கிரைக் ஓவர்ட்டன் 32 (33) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். இருப்பினும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் 45.5 ஓவர்களில் ஆல்-அவுட்டான அந்த அணி 259 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளும் சஹால் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். அதை தொடர்ந்து 260 என்ற இலக்கை துரத்திய இந்தியாவுக்கு 1 (3) ரன்னில் ஷிகர் தவான் அவுட்டாக அவருக்கு பின்னாடியே கேப்டன் ரோகித் சர்மாவும் 17 (17) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

போராடிய பண்ட் – பாண்டியா:
அந்த நிலைமையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி மீண்டும் 3 பவுண்டரியுடன் 17 (22) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அதனால் 38/3 என தடுமாறிய இந்தியாவை காப்பாற்ற முயன்ற சூர்யகுமார் யாதவும் 16 (28) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் இப்போட்டியிலும் தோல்வி உறுதியென இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர். 72/4 என்ற அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பொறுப்பை உணர்ந்து மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நங்கூரத்தை போட்டு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

17-வது ஓவரில் ஜோடி சேர்ந்து ஆரம்பத்தில் நிதானத்தை காட்டிய இவர்கள் நேரம் செல்ல செல்ல சிங்கிள், டபுள், பவுண்டரி என படிப்படியாக அதிரடியை அதிகப்படுத்தி 36-வது ஓவர் வரை அற்புதமாக பேட்டிங் செய்தனர். அதில் இருவருமே அரைசதம் கடந்து 133 ரன்கள் அபார பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியை இந்தியாவின் கட்டுக்குள் கொண்டு வந்தபோது 10 பவுண்டரியுடன் 71 (55) ரன்கள் எடுத்திருந்த பாண்டியா வெற்றியை கிட்டதட்ட உறுதி செய்து ஆட்டமிழந்தார்.

மிரட்டிய பண்ட்:
அப்போது 205/5 என்ற நிலையில் வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்ட இந்தியாவுக்கு ஜடேஜா 7* (15) ரன்கள் எடுக்க மறுபுறம் இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக மாறி கடைசி நேரத்தில் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதோடு நிற்காமல் கடைசியில் 25 ரன்கள் தேவைப்பட்ட போது டேவிட் வில்லி வீசிய 42-வது ஓவரில் 4, 4, 4, 4, 4 என அடுத்தடுத்து 5 பவுண்டரிகள் பறக்கவிட்ட அவர் ஜோ ரூட் வீசிய 43-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி தெறிக்கவிட்டு 16 பவுண்டரி 2 சிக்சருடன் 125* (113) ரன்கள் விளாசி இந்தியாவை 261/5 (42.1) ரன்களை எடுக்க வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தார்.

இந்த முக்கியமான போட்டியில் இந்திய பவுலர்கள் வழக்கம் போல தங்களது வேலையை கச்சிதமாக செய்தாலும் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பி இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்படுத்தினர். இருப்பினும் இலக்கு பெரிதாக இல்லை என்ற நிலைமையில் ரன்ரேட் கட்டுக்குள் இருந்ததை பயன்படுத்திய பண்ட் – பாண்டியா அமைத்த பார்ட்னர்ஷிப் இந்தியாவை அபார வெற்றி பெற வைத்தது. இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை எடுத்தார். இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் 2014க்கு பின்பு மீண்டும் மண்ணைக் கவ்வ வைத்து வெற்றியுடன் இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளது.

Advertisement