உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இவரே இருப்பார் – விவரம் இதோ

ind

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி வருகிற ஜூன் மாதம் 18 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. சர்வதேச டெஸ்ட கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடர் நடைபெறுவதால், இந்த இறுதி போட்டியானது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இறுதிப் போட்டியில் விராட் கோலி, கேன் வில்லியம்சன் என இப்போதைய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்கள் விளையாட இருக்கின்றனர். ஆனால் இவர்களை எல்லாம் தாண்டி , இந்த இறுதிப் போட்டியிலும், அதற்கடுத்து வரும் இங்கிலாந்து தொடரிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பன்ட் எப்படி விளையாடப் போகிறார் என்பதை பார்க்கத்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

INDvsNZ

ரிஷப் பன்ட்டின் ஆட்டம்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் தலை எழுத்தையே நிர்ணயிக்கப்போகிறது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தற்போது கருத்துகள் கூறிவருகின்றனர். அந்த அளவிற்கு கடந்த சில டெஸ்ட் தொடர்களில் தனது அபார திறமையை வெளிகாட்டியிருக்கிறார் ரிஷப் பன்ட். 2018ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக, அந்நாட்டிலேயே நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமான ரிஷப் பன்ட், இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்றார்போல் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் ரன்னையே சிக்ஸ் அடித்துத் தான் தொடங்கினார். டெஸ்ட் போட்டி வரலாற்றிலேயே சிக்ஸ் அடித்து ரன் கணக்கை தொடங்கிய முதல் வீரரும் ரிஷப் பன்ட்தான். அந்த தொடரின் இறுதிப் போட்டியில் அற்புதமாக ஆடிய அவர், தனது முதல் சதத்தை அந்த போட்டியில் பதிவு செய்தார்.

- Advertisement -

அதற்குப் பிறகு 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேவியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட தொடரில் சதமடித்து, ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்தாலும், அவ்வப்போதுதான் ஒரு சில நல்ல இன்னிங்சை அவரால் ஆட முடிந்தது. மேலும் அவருடைய மந்தமான விக்கெட் கீப்பிங் செயல்பாட்டினாலும் சமூக வலைத் தளங்களில் ரசிகர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளான அவர், இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணிகளிலிருந்து ஓரம்கட்டப்பட்டார். தனது முதல் டெஸ்ட் தொடரிலேயே சதமடித்து அசத்திய அவருக்கு, அதன்பிறகு சிறப்பாக செயல்பட முடியாத காரணத்தினால் இந்திய டெஸ்ட் அணியிலும் தனது வாய்ப்பு பறிபோவதை கண்கூடகவே பார்க்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

Pant

2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ரிஷப் பன்ட்டை அணியிலிருந்து நீக்கிவிட்டு விருத்திமான் சாஹாவிற்கு இடம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவரும் தன்னுடைய சொதப்பல் ஆட்டத்தை வெளிப்படுத்தவே, அடுத்த போட்டியில் மீண்டும் ரிஷப் பன்ட்டிற்கு இந்திய அணியல் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட ரிஷப் பன்ட், அந்த தொடரில் மிகச் சிறப்பாக பேட்டிங் ஆடியதோடு மட்டுமல்லாமல் அதி அற்புதமாக கீப்பிங்கும் செய்து, தன்னை சமூக வலைத்தளங்களில் கலாய்த்த ரசிகர்களுக்கு தனது திறமையின் மூலமாக பதிலடி தந்தார்.

- Advertisement -

அந்த தொடரில் பேட்டிங் மற்றும் கீப்பிங்கிலும் மட்டுமல்லாது ஸ்லெட்ஜிங்கிலும் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை டிம் பெய்னை வெறுப்பேற்றி நிரூபித்துக்காட்டிய அவர், அந்த தொடரில் 68.5 என்ற அவரேஜூடன் 274 ரன்கள் குவித்து, அந்த தொடரை இந்தியா கைப்பற்ற பக்கபலமாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு ஆடுளங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்த ரிஷப் பன்ட்டிற்கு, அடுத்ததாக இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி, உள்ளூர் ஆடுகளங்களிலும் தன் திறமையை நிரூபித்துக் காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதையும் செய்து காட்டிய அவர், இங்கிலாந்து தொடரில் 54 என்ற அவரேஜில் 270 ரன்கள் அடித்து அசத்தினார்.

pant 1

இப்படி கடந்த இரண்டு தொடர்களில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மைதானங்களில் தனது அபார திறமையை வெளிக்காட்டி இந்திய டெஸ்ட் அணியின் மிகப் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக வளர்த்திருக்கும் ரிஷப் பன்ட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்திய அணிக்காக தன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் இந்த இறுதிப் போட்டி நடைபெற இருக்கும் இங்கிலாந்தில் தான் தன் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை ரிஷப் பன்ட் தொடங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்திய அணிக்காக 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 1358 ரன்கள் அடித்துள்ளார்.

Advertisement