இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனும், நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வந்த வேளையில் இந்த தொடரின் ஐந்தாவது போட்டிக்கு முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து கடைசி நேரத்தில் வெளியேறினார். தற்போது தனது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கான சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
ஏழை மாணவிக்கு ரிஷப் பண்ட் செய்த உதவி :
பின்னர் சிகிச்சையை முடித்த கையோடு மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் வகையில் மெல்ல மெல்ல தயாராகி வருகிறார். இந்த இங்கிலாந்து தொடரில் நான்காவது டெஸ்ட் போட்டியின் போது உடைந்த காலுடன் மைதானத்திற்கு வந்து அரைசதம் அடித்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்திருந்தது.
இவ்வேளையில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஏழை மாணவி ஒருவருக்கு ரிஷப் பண்ட் கல்வி உதவி செய்தது குறித்த தகவல் வெளியாகி மேலும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டுக்கள் குவிய காரணமாக அமைந்துள்ளது. அந்த வகையில் கர்நாடக மாநிலத்தை டீ கடைக்காரரின் மகள் உயர்கல்வியில் நல்ல மதிப்பெண் எடுத்தும் கல்லூரி படிப்பை மேற்கொள்ள முடியாத சூழலில் சிக்கி தவித்துள்ளார்.
இதனை அறிந்த ரிஷப் பண்ட் அவருக்கு தேவையான கல்விச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டது மட்டுமின்றி அந்த மாணவியின் முதலாம் ஆண்டு கல்லூரி கட்டணமான 40 ஆயிரம் ரூபாயை நேரடியாக கல்லூரி நிர்வாகத்திற்கும் செலுத்து விட்டதாக கூறப்படுகிறது. அந்த கல்லூரி நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரியின் நெருங்கிய நண்பர் ரிஷப் பண்டின் மேனேஜராக இருக்கிறாராம்.
எனவே இப்படி எந்த ஏழை மாணவர்கள் கல்விக்காக வந்தாலும் ரிஷப் பண்ட் மேலாளரின் மூலமாக தொடர்பு கொண்டு இந்திய வீரர்களிடம் இருந்து கிடைக்கும் உதவியை மாணவர்களுக்கு வழங்குவது ஒரு வழக்கமாக இருந்து வருகிறதாம். அந்த வகையில் தான் தற்போது ரிஷப் பண்ட் ஜோதி என்கிற மாணவியின் முழு படிப்பு செலவையும் ஏற்றுள்ளார்.
இதையும் படிங்க : ரோஹித் அதை செய்வாரா தெரியாது.. இதை வெச்சே கில்லை ஒன்டே கேப்டனாக்கலாம்.. ஃகைப் ஆதரவு
ஏற்கனவே இந்த கல்லூரியில் படிக்கும் சில மாணவர்களுக்கு இந்திய அணியின் நட்சத்திர துவக்க வீரரான கே.எல் ராகுல் மூலம் உதவி கிடைத்துள்ள வேளையில் தற்போது ரிஷப் பண்டும் ஒரு ஏழை மாணவியின் கல்விக்காக உதவியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது.



