இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. குறிப்பாக கடைசிப் போட்டியில் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது. அதனால் படுதோல்வியை சந்திக்கும் என்று கணித்த பல முன்னாள் இங்கிலாந்து வீரர்களுக்கு இளம் இந்திய அணி பதிலடி கொடுத்தது.
அதே போல சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது நிறைய விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக இதற்கு முன் வெளிநாட்டு மண்ணில் பெரிய ரன்கள் குவித்திராத அவர் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று சில முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். ஆனால் முதல் தொடரிலேயே டான் பிராட்மேனுக்கு பின் அதிக ரன்கள் (754) குவித்த கேப்டனாக கில் உலக சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் கேப்டன்:
அதனால் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ள அவர் தம்மை இந்தியாவின் அடுத்த டெஸ்ட் கேப்டனாக நியமித்தது சரி என்பதையும் நிரூபித்துள்ளார். இந்நிலையில் சுப்மன் கில்லை ஒருநாள் கிரிக்கெட்டிலும் இந்தியாவின் கேப்டனாக நியமிக்கலாம் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா 37 வயதாகி விட்டதால் எவ்வளவு காலம் விளையாடுவார் என்பது நமக்குத் தெரியாது என அவர் கூறியுள்ளார்.
எனவே 2027 உலகக்கோப்பை போன்ற வருங்காலத் தொடர்களை முன்னிட்டு கில்லை கேப்டனாக நியமிக்கலாம் என்று தெரிவிக்கும் ஃகைப் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில் ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பையும் பெறுவார். ஏனெனில் ரோஹித் சர்மா எவ்வளவு காலம் கேப்டனாக தொடர்வார் என்பது நமக்குத் தெரியாது. கில் அடுத்த கேப்டனாக தயாராக இருக்கிறார்”
கைப் ஆதரவு:
“ஏற்கனவே வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஓரளவு அசத்தியுள்ள அவர் இங்கே டெஸ்ட் போட்டிகளிலும் அசத்தியுள்ளார். நீங்கள் இளம் அணிக்கு ஆதரவளிக்கும் போது ஒருவர் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் அசத்த வேண்டும். அந்த வகையில் கில்லுக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணம் அபாரமானதாக அமைந்துள்ளது. அவர் இங்கிலாந்தில் கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் வெற்றிக்கான வாய்ப்புகளை உருவாக்கினார்”
இதையும் படிங்க: இனி யாரும் சாக்கு போக்கு சொல்ல முடியாது.. இந்திய வீரர்களுக்கு புதிய கட்டுப்பாட்டை விதித்த – பி.சி.சி.ஐ
“அவரை டெஸ்ட் கேப்டனாக நியமித்த போது பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் இளம் கேப்டனாக இளம் அணியுடன் அழுத்தத்துடன் சென்ற அவர் கேள்விக்கான பதில்களைக் கொடுத்துள்ளார். குறிப்பாக பேட்டிங்கில் அவர் டான் ப்ராட்மேன் சாதனையை நெருங்கும் அளவுக்கு அசத்தினார். அந்த வகையில் பேட்டிங்கில் கில் வலுவான கம்பேக் கொடுத்துள்ளார்” என்று கூறினார்.



