
இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் இங்கிலாந்தில் தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகளின் முடிவில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள அவர் 7 இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்களுடன் 479 ரன்கள் அடித்துள்ளார். அவரது இந்த பிரமாதமான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இவ்வேளையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தில் கால் பகுதியில் காயமடைந்த அவர் அந்த போட்டியின் பாதியிலேயே மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் பாதத்தில் எலும்பு முறிவது ஏற்பட்டது தெரிய வந்தாலும் இந்திய அணியின் நலனுக்காக பேட்டிங் செய்ய வந்த அவர் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்தும் அசத்தியிருந்தார்.
அவருக்கு ஏற்பட்ட இந்த காயத்திற்கு ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் அவருக்கு கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுவதால் ஐந்தாவது போட்டியில் விளையாட முடியாது என்றும் அதன் காரணமாக அவர் அணியிலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேறி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதனால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக தமிழக விக்கெட் பேட்ஸ்மேனான நாராயணன் ஜெகதீசன் இந்திய டெஸ்ட் அணியில் முதல்முறையாக இணைந்துள்ளார்.
இந்நிலையில் தனது காலில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு தற்போது முதல் முறையாக அந்த காயம் குறித்தும் அதற்கான அப்டேட் குறித்தும் சில முக்கிய தகவல்களை ரிஷப் பண்ட் தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது : அனைவரிடம் இருந்து கிடைத்த அன்பும், வாழ்த்துக்களையும் நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது. உண்மையிலேயே இந்த வாழ்த்துக்கள் என்னை மேலும் பலமடைய செய்கின்றன.
தற்போது எனது காலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவுக்கான ரீஹாபில் இருக்கிறேன். என்னுடைய காயம் தற்போது படிப்படியாக குணமடைந்து வருகிறது. இருந்தாலும் பொறுமையுடன் இருந்து முழு உடற்தகுதி பெறும் வரை காத்திருப்பேன். இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவது எனக்கு கிடைத்த பெருமை. மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பும் நேரத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என ரிஷப் பண்ட் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : ஒருவேளை பும்ரா கடைசி போட்டியில் ஆடலனா.. அவருக்கு பதிலாக அறிமுகமாகும் புதிய வீரர் – யார் தெரியுமா?
அவரது இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் விரைவில் நீங்கள் முழு உடற்தகுதியை எட்டி மீண்டுவர வாழ்த்துக்கள் என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதோடு ரிஷப் பண்டின் காயத்தை பிசிசிஐ-யின் மருத்துவக்குழு கண்காணித்து வரும் வேளையில் விரைவில் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வருவார் என பிசிசிஐ-யும் விளக்கம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.