
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. இந்த தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய வெளிப்படுத்திய இந்த செயல்பாடு அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றது.
அதனை தொடர்ந்து தற்போது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிந்த கையோடு நாடு திரும்பும் இந்திய அணிக்கு அடுத்த தொடரும் தயாராக காத்திருக்கிறது.
அந்த வகையில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரானது அடுத்த மாதம் இரண்டாம் தேதி முதல் துவங்க உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி அகமதாபாத் மைதானத்திலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது டெல்லி மைதானத்திலும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் இடம்பெறுவது பெறுவது சந்தேகம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏனெனில் ஏற்கனவே இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரிஷப் பண்ட் நான்காவது போட்டியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அந்த போட்டியின் பாதியிலேயே வெளியேறியிருந்தார். அதன்பிறகு கடைசி போட்டியில் இருந்து விலகிய அவர் காயத்திற்க்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார்.
இதையும் படிங்க : இன்னும் 3 ரன்கள் தேவை.. பயிற்சியாளர் கம்பீரின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – சஞ்சு சாம்சன்
இந்நிலையில் எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அவரது காயம் முழுவதுமாக குணமடையாது என்று கூறப்படுவதால் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம்பெற மாட்டார் என்று கூறப்படுகிறது. அதேவேளையில் ரிஷப் பண்ட் இல்லாத சூழலில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் துருவ் ஜுரேல் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.