3 முறை 200.. ஆர்சிபி’யிடம் அடி வாங்குவதற்காக அளவெடுத்து செய்யப்பட்ட ரிஷப் பண்ட்.. மோசமான சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 70வது மற்றும் கடைசி லீக் போட்டி மே 27ஆம் தேதி லக்னோவில் நடைபெற்றது. அப்போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 228 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக அபாரமாக விளையாடிய கேப்டன் ரிஷப் பண்ட் 118* (61) ரன்கள் அடித்து அசத்தினார். அவருடன் மிட்சேல் மார்ஷ் 67 (37) ரன்கள் எடுத்தார்.

இருப்பினும் அடுத்து விளையாடிய ஆர்சிபி அணி சுமாராக பௌலிங் செய்த லக்னோ பவுலர்களை பந்தாடி 18.4 ஓவரிலேயே 230-4 ரன்கள் எடுத்து எளிதாக வென்றது. அந்த அணிக்கு துவக்க வீரர்கள் பில் சால்ட் 30, விராட் கோலி 54 ரன்களை அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்கள். மிடில் ஆர்டரில் அதை வீணடிக்காத கேப்டன் ஷர்மா அதிரடியாக 85* (33) ரன்கள் குவித்தார்.

- Advertisement -

லக்னோ தோல்வி:

கூடவே மயங் அகர்வால் 41* (23) ரன்களை எடுத்ததால் 9வது வெற்றியைப் பெற்ற பெங்களூரு புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி குவாலிபயர் 1 போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது. மறுபுறம் வில்லியம் ஓ’ரோர்க்கே அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் எடுத்தும் லக்னோ ஆறுதல் வெற்றியைக் கூட பெறாமல் வெளியேறியது.

இத்தனைக்கும் 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் இந்த வருடம் முழுவதும் திணறலாக விளையாடினார். அப்படிப்பட்ட அவர் இப்போட்டியில் சதத்தை அடித்ததால் லக்னோ வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி லக்னோ அவருடைய தலைமையில் பரிதாபமாக தோற்றது. முன்னதாக இப்போட்டியில் ஆர்சிபி அணிக்கு எதிராக ரிசப் பண்ட் தன்னுடைய அதிகபட்ச ஸ்கோரை (118*) பதிவு செய்தார்.

- Advertisement -

மோசமான சாதனை:

இது போக ஆர்சிபி அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் அடித்த அடுத்த டாப் 5 ஸ்கோர்கள் 85, 61, 58*, 57, 45 ஆகும். ஆச்சரியப்படும் வகையில் அந்த 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி வெற்றிகளை பெற்றுள்ளது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் ஆர்சிபி அணிக்கு எதிராக ரிஷப் பண்ட் அடித்த டாப் ஸ்கோர்கள் 118*, 85, 61, 58*, 57, 45 ஆகும். அந்த 6 போட்டிகளிலுமே ஆர்சிபி அணி வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ஆர்சிபி வெற்றிக்கு என் குரு டிகே சொன்ன இந்த ஆலோசனையே காரணம்.. லக்னோவை சாய்த்த ஜிதேஷ் பேட்டி

இதைப் பார்க்கும் ரசிகர்களால் “ஆர்சிபி அணியிடம் அடி வாங்குவதற்காகவே அளவெடுத்து செய்யப்பட்டாற் போல் ரிஷப் பண்ட் இருக்கிறார்” என்று ஜாலியாக சொல்லாமல் இருக்க முடியாது. இது போக இந்த வருடம் ரிஷப் பண்ட் தலைமையில் டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு அணிகளுக்கு எதிராக 200+ ரன்கள் இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் லக்னோ தோற்றது. இதன் வாயிலாக ஒரு ஐபிஎல் தொடரில் 3 முறை 200+ ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் தோற்ற முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

Advertisement