IND vs ENG : இதை மட்டும் செய்யுங்க, பண்ட் நிச்சயம் கில்கிறிஸ்ட் மாதிரி வருவார் – முன்னாள் வீரர்கள் வலுவான கோரிக்கை

Rishabh Pant Adam Gilchrist
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்த இந்தியா 2 – 2 (5) என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சமன் செய்ய மட்டுமே முடிந்தது. அதனால் 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட இந்தியா அடுத்ததாக ஜூலை 7-ஆம் தேதியன்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது. டெஸ்ட் போட்டியில் கடைசி நேரத்தில் விலகிய கேப்டன் ரோகித் சர்மா இந்த டி20 தொடரில் இந்தியாவை வழிநடத்த உள்ளார்.

மறுபுறம் உலக கோப்பையை வென்று கொடுத்த இயன் மோர்கன் சமீபத்தில் ஓய்வு பெற்ற நிலையில் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ஜோஸ் பட்லர் தலைமையில் மொய்ன் அலி, ஜேசன் ராய் போன்ற அதிரடி வீரர்களை கொண்ட இங்கிலாந்து டி20 தொடரிலும் இந்தியாவை சாய்க்க தயாராகியுள்ளது. எனவே அந்த சவாலை சமாளித்து தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, ஹர்ஷல் படேல் போன்ற தரமான வீரர்களை சிறப்பாக வழிநடத்தி டெஸ்ட் போட்டியில் தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை டி20 தொடரில் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து ரோகித் சர்மா பதிலடி கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- Advertisement -

டெஸ்ட், டி20 பண்ட்:
டெஸ்ட் போட்டி முடிந்த ஒருநாள் இடைவெளியில் இத்தொடர் துவங்குவதால் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் முதல் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் முதன்மை விக்கெட் கீப்பராக கருதப்படும் ரிஷப் பண்ட் 2-வது போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் சிறப்பாக ரன்களை குவிப்பாரா என்ற கேள்வி நிலவுகிறது.

ஏனெனில் அறிமுகமானது முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற சவாலான வெளிநாட்டு மண்ணில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற தோனியால் படைக்க முடியாத சாதனைகளை கூட அசால்ட்டாக படைத்து வரும் அவர் பர்மிங்காமில் நடந்த 5-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 98/5 என இந்தியா திணறிய போது சரவெடியாக பேட்டிங் செய்து 19 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 89 பந்துகளில் சதமடித்து மொத்தமாக 146 ரன்களை 131.53 என்ற டி20 ஸ்டிரைக் ரேட்டில் விளாசி இந்தியாவை தூக்கி நிறுத்தினார்.

- Advertisement -

2-வது இன்னிங்சிலும் 57 ரன்கள் குவித்த அவர் இந்தியாவின் வெற்றிக்காக போராடினார். அப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ள அவர் அதிரடியாக விளையாட வேண்டிய வெள்ளை பந்து கிரிக்கெட்டான ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 715 ரன்களை 32.50 என்ற சுமாரான சராசரியிலும் டி20 கிரிக்கெட்டில் 741 ரன்களை 23.15 என்ற மோசமான சராசரியில் எடுத்து திண்டாடுகிறார்.

ஓப்பனிங் ஐடியா:
குறிப்பாக சமீபத்தில் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டி20 தொடரில் கேப்டனாக விளையாடிய அவர் பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பி கடுமையான விமர்சனங்களை வாங்கி கட்டிக்கொண்டார். அதுவும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் தொடர்ச்சியாக அவுட்டான அவரை பேட்டிங்கில் கொஞ்சம் கூட முன்னேறவில்லை என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விமர்சித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் பர்மிங்காம் டெஸ்டில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் தொடக்க வீரராக களமிறங்கினால் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் போல் வருவார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் தடுமாறும் ரிஷப் பண்ட் முன்னேறுவதற்கு இதுவே சரியான வழி எனக்கூறும் அவர் இது பற்றி சமீபத்தில் பேசியது பின்வருமாறு.

“இந்த முடிவு மோசமானதாக இருக்காது. ஆஸ்திரேலியாவுக்கு ஆடம் கில்கிறிஸ்ட் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் என்ன செய்தார் என்று பாருங்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 அல்லது 7-வது இடத்தில் களமிறங்கிய அவர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிரட்டலான தொடக்க வீரராக அசத்தினார். அந்த வகையில் ரிஷப் பண்ட் போன்றவருக்கு அதிக ஓவர்கள் விளையாட வாய்ப்பு கிடைத்தால் அவரைபோல் அதிரடியாக விளையாடக்கூடும்”

“அவர் பினிஷராக இருப்பார் என்று நாம் பேசுகிறோம். ஆனால் கடைசி நேரத்தில் வந்து குருட்டுத்தனமாக அடிக்கும் அவர் அவுட்டாகி நேராக சென்று விடுகிறார். எனவே தொடக்க வீரராக வந்தால் முதல் பந்திலிருந்தே குருட்டுத்தனமாக அடிக்க மாட்டார். ஒருசில பந்துகளை எதிர்கொண்டு வேகம், பவுன்ஸ் போன்றவற்றை கணித்து அடிப்பார். மேலும் உலகின் இதர இடங்களைவிட இங்கிலாந்தில் வெள்ளை பந்திலேயே ஸ்விங் இருக்கும். இங்கு சிறப்பாக விளையாடும் அவரை இந்த சோதனையில் ஈடுபடுத்தினால் இந்தியாவுக்கு சாதகமாகலாம்” என்று கூறினார்.

இதே கருத்தைப் பின்பற்றி முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “டி20 போட்டிகளில் ரிஷப் பண்ட் தொடக்க வீரராக களமிறங்குவதை பற்றி இந்தியா யோசிக்க வேண்டும். அனேகமாக அங்குதான் அவர் மலர்ச்சியடைவார் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Advertisement