
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்று ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது :
நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்களை குவிந்திருந்தது. அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தினை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியானது சற்று நிதானமாகவே இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டாலும் இறுதியில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி சார்பாக இந்த போட்டியில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 ரன்களையும், ரிஷப் பண்ட் 54 ரன்களையும் அடித்து அசத்தியிருந்தினர். அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது.
இந்நிலையில் இன்றைய போட்டியின் போது பேட்டிங் செய்ய வருவாரா? என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் மீண்டும் பேட்டிங் செய்ய வந்தது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஏனெனில் நேற்றைய போட்டியின் போது கால் பகுதியில் காயம் ஏற்பட்ட அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைக்கு பின்னர் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதனால் அவர் பேட்டிங் செய்ய வர மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணி இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால் ரன் குவிப்பை உயர்த்தும் நோக்கில் அவர் உடைந்த காலுடன் பேட்டிங் செய்ய மைதானத்திற்குள் நுழைந்தபோது ஒட்டுமொத்த மைதானத்தில் இருந்து ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
இதையும் படிங்க : இத்தனை ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணியில் அரங்கேறிய – அரிதான நிகழ்வு
அதேபோன்று அவர் அரைசதம் அடிக்கும் போதும் சரி, அவர் ஆட்டமிழந்து வெளியேறும் போதும் சரி, ஒட்டுமொத்த அரங்கமே அவருக்கு கைதட்டி ஆரவாரம் கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் 75 பந்துகளை சந்தித்த அவர் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 54 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.